முக்கிய செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

165

சிறிலங்காவில் நம்பகமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளவர்களின் சொத்துக்களை முடக்குதல் மற்றும் பயணத் தடைகளை விதிப்பது குறித்து ஆராயுமாறு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உறுப்பு நாடுகளிடம் பரிந்துரைத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பசெலெட்  சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின், முன்கூட்டிய பிரதியிலேயே அவர் இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

17 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் சிறிலங்கா அரசாங்கம், பொறுப்புக்கூறலை நிறைவேற்றத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதுடன், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு முன்வைத்துள்ள பரிந்துரைகளில்,

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் கண்காணிப்பை வலுப்படுத்தி, மனித உரிமைகள் பேரவைக்கு கிரமாக அறிக்கையிடுமாறு கோர வேண்டும் என்றும், கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான ஆதாரங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப் பிழைத்தவர்களுக்காக வாதிடுதல் மற்றும் உறுதியான அதிகார வரம்புடன் கூடிய நீதித்துறை நடவடிக்கைகளில், அர்ப்பணிப்புடன் ஆதரவை உறுதி செய்தல் வேண்டும் என்றும் அவர் உறுப்பு நாடுகளிடம் கோரியுள்ளார்.

கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என்ற நம்பகமான குற்றச்சாட்டுக்களுக்குள்ளானவர்களுக்கு எதிராக, சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் போன்ற சாத்தியமான தடைகளை விதிப்பது குறித்து ஆராய வேண்டும்  எனவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் யோசனை முன்வைத்துள்ளார்.

சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினருக்கான பயிற்சிகள் மற்றும் இராணுவ பரிமாற்றத் திட்டங்களின் போது, கடுமையான வடிகட்டல் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, ஐ.நாவுக்கு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையில், சிறிலங்கா படையினரை ஐ.நா அமைதி காக்குப் பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்பாக மீளாய்வு செய்யுமாறும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கோரியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *