ஐ.நா வழங்கிய கால அவகாசத்தை இழுத்தடிப்புக்கு பயன்படுத்தாது, பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றுமாறு – அனைத்துலக மன்னிப்புச் சபை

1106

ஜ.நா. மனித உரிமைகள் சபையில் வழங்கப்பட்ட கால அவகாசத்தை கால இழுத்தடிப்புக்காகப் பயன்படுத்தக் கூடாது எனவும், தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வழங்கப்பட்ட காலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை இலங்கைப் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயத்தினை தாம் தெட்டத் தெளிவாக ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்துள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபையின் செயலர் சயில் செட்டி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சயில் செட்டி தலைமையிலான குழுவினர், வடபகுதிக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு இதழியல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தினர்.

இதன்போது, போர்க்குற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவோ, அங்கீகரிக்கவோ போவதில்லை என்று மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கை அரசின் தலைமைகள் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றமை தொடர்பில், மன்னிப்புச் சபையின் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த சயில் செட்டி, அரசியல்வாதிகள் வேறுபட்ட கருத்துக்களைச் சொல்ல முடியும் எனவும், இறுதிப் போரில் பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டு இருக்கின்ற நிலையில், இதன் உண்மைத் தன்மை கண்டறியப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு அனைத்துலக சமூகத்தின் பங்களிப்புடன் கூடிய கலப்பு நீதிமன்றம் நிறுவப்பட்டு விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும், குற்றமிழைத் தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு இரண்டு ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதனைக் கால இழுதடிப்புக்கு பயன்படுத்தக் கூடாது எனவும், ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கே பயன்படுத்தவேண்டும் என்பதையும் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் நடைபெறும் போராட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டதாகவும், வடக்கில் அதிகளவு இராணுவப் பிரசன்னத்தை உணர முடிவதாகவும் தெரிவித்துள்ள அவர், வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்படவேண்டும் என்பதுடன், மக்களின் காணிகள் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

காணாமற்போனோர் விடயங்களையும் ஆராய்ந்துள்ளதாகவும், ஒருவர் காணாமற்போயிருப்பினும் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும் என்பதுடன், அது தொடர்பிலும் பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *