முக்கிய செய்திகள்

ஐ.நா.விடயத்தில் முரண்படும் சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர்

78

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும், விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் கையாள முடியாது என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

“சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் விவகாரங்களை ஐ.நா பாதுகாப்புச் சபை கையாள முடியுமே தவிர, மனித உரிமைகள் பேரவையினால் எதையும் செய்ய முடியாது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு நாங்கள் கட்டுப்படவில்லை.

ஐ.நா பாதுகாப்புச் சபையில்  உள்ள சிறிலங்காவின்  நண்பர்கள் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டுள்ளதால், அங்கு அவ்வாறான  தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்பில்லை.

ரஷ்யாவும், சீனாவும் எமக்கு எப்போதும் ஆதரவளித்து வருகின்றன.

இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை விதிப்பது, சொத்துக்களை முடக்குவது குறித்தும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் தீர்மானிக்க முடியாது.

அவர்களால் பரிந்துரைகளை மாத்திரம் முன்வைக்க முடியும்.

எனவே, ஐ.நாவினால் சிறிலங்காவுக்கு எதிராக தடைகளை விதிக்க வாய்ப்பு இல்லை, சில நாடுகள் அவ்வாறான தடைகளை விதிக்கலாம்.

சிறிலங்காவுக்கு புவிசார் மூலோபாய முக்கியத்துவம் உள்ளது. எனவே இந்த நாடுகள் சிறிலங்காவிடம் இருந்து விலகி இருக்க விரும்புவார்கள் என நான் நினைக்கவில்லை.

அவர்கள் சிறிலங்காவுடன் இணைந்து செயற்பட விரும்பினால், பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் ஆகியன சிறந்தாக முடிவாக இருக்காது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *