முக்கிய செய்திகள்

ஒட்டு மொத்த வடக்கு கிழக்கையும் போராட்ட சூழ்நிலைக்குள் தள்ளி விட வேண்டாம் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்

699

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளில் நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

கடந்த 14ஆம் நாள் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்த சிறைக்கைதிகளின் போராட்டம் 11ஆவது நாளாக இன்றும் தொடர்கிற நிலையில், ஊடகம் ஒன்றிடம் அவர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பிரதேசங்களில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இரண்டு போராட்டங்கள் நடந்துள்ளதாகவும், தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்பதா, இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த கட்ட நகர்வை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், போராட்டத்திற்கு மக்களைத் தள்ளுவதா, இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்றும் விபரித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் அரசியல் தீர்வாக இருக்கலாம், அன்றாட தேவைக்காக இருக்கலாம், எல்லாமே போராட்டத்தில்தான் தங்கியுள்ளது என்றும், இந்த அரசாங்கம், நல்லாட்சி முகத்துடன் செயற்படவில்லை என்பதை இது காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டங்கள் தொடங்கியுள்ளன என்றும், இது தமிழர்களின் மன எழுச்சியையும், உள்ளக் குமுறலைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், ஒட்டுமொத்த வடக்கு கிழக்கையும் இந்த நிலைக்குத் தள்ளக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு என்றும் அருட்தந்தை சக்திவேல் விபரித்துள்ளார்.

இதேவேளை சமூ நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதிகளும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியுள்ள நிலையில், அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் இணைச் செயலாளர் தனுஜன் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தனுஜன், ஒரு மிகப்பெரிய சமூக அநீதிக்கு உட்பட்டவர்களாக அரசியல் சிறைக்கைதிகள் இருக்கிறார்கள் என்றும், அவர்களை வாழவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நல்ல உதாரணம் இருக்கிறது என்றும், இதனைப் பின் பற்றி தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்ப வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *