முக்கிய செய்திகள்

ஒன்ராறியோவில் காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள புகைமூட்டத்தினை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர்

391

ஒன்ராறியோவின் வடகிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக ஏற்பட்டுள்ள கனத்த புகைமூட்டம் குடியிருப்பு பகுதிகளை நோக்கி நகர ஆரம்பித்துளள நிலையில், அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக Parry Sound பகுதியில் காட்டுத்தீ தீவிரமாக பரவிவரும் நிலையில், அதனை அணமித்த பகுதிகளில் உள்ள மக்கள், தங்களது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆடைகளை பொதிசெய்துகொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

தமது வீடுகள் அமைந்துள்ள பகுதிகளை கடுமையான புகை சூழ ஆரம்பித்துள்ளதனால், கண் எரிச்சல், சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகமகொடுக்க நேர்ந்துள்ளதாக, அங்கிருந்து வெளியேறிவரும் மக்கள் கண்ணீருடன் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த அந்த பகுதியில் யூலை மாதம் 18ஆம் நாள் ஆரம்பித்த காட்டுத்தீ, தற்போது வரையில் 100 சதுரக் கிலோமீடடருக்கும் அதிகமான வனப்பகுதியை கருக்கிவிட்டதாக, ஒன்ராறியோ இயற்கைவளங்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த காட்டுத்தீயானது ட்ரான்ஸ் கனடா(Trans-Canada) நெடுஞ்சாலையில் இருந்து ஐந்து கிலோமீடடர் தொலைவிலேயே உள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் அது இன்னமும் வேகமாக பரவும் ஆபத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் 500க்கும் அதிகமான தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாகவும், மெக்சிக்கோவில் இருந்து உதவிக்கு வந்த 200க்கும் அதிகமான தீயணைப்பு படையினரும் களத்தில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *