ஒருங்கிணைந்துள்ள தமிழ் தேசியக் கட்சிகளால் புதிய அரசியலமைப்புக்கான வரைபை உருவாக்குவதற்கு ஐந்து பேர் கொண்ட குழு

113

ஒருங்கிணைந்துள்ள தமிழ் தேசியக் கட்சிகளால் புதிய அரசியலமைப்புக்கான வரைபை உருவாக்குவதற்கு ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பிற்கான சிபாரிசுகளை இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி அரசாங்கம் கோரியுள்ளது.

இந்நிலையில் தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது, கடந்த அரசில் யாப்பு உருவாக்க முயற்சியின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த வரைபு, கடந்த அரசாங்கத்தில் தமிழ் மக்கள் பேரவை சமர்ப்பித்த வரைவு, அத்துடன், வட மாகாண சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைபு ஆகியவற்றின் உள்ளடங்கங்களிலிருந்து மேம்பட்ட புதிய வரைபை உருவாக்குவதென முடிவானது.

இந்த வரைபை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. மாவை சேனாதிராசா தலைமையில் சீ.வீ.கே.சிவஞானம், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் யாப்பு வரைபை உருவாக்க குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் 10 நாட்களில் இந்தக் குழு வரைபை இறுதி செய்து, தமிழ் தேசியக் கட்சிகளின் தலைமைகளுக்கு சமர்ப்பிப்பதென முடிவாகியுள்ளது.

இதேவேளை, சி.வி.விக்னேஸ்வரன் தரப்பில் நிபுணர்களை வைத்து ஒரு யாப்பு வரைபை உருவாக்கி வருவதாக, அவரது பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது. இந்த வரைபையும் உள்ளடக்கியதாக, புதிய வரைபைத் தயாரிப்பதென முடிவாகியுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *