ஒரே ஒரு 20 ஓவர் போட்டி: இந்தியா-இலங்கை நாளை பலப்பரீட்சை

1420

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்தியா முழுமையாக கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது.

இந்தியா- இலங்கை இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் கொழும்பில் நாளை (6-ந்தேதி) நடக்கிறது.

20 ஓவர் போட்டியிலும் வென்று இந்தியா தனது ஆதிக்கத்தை நீட்டித்து கொள்ளும் ஆர்வத்துடன் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கும் இந்திய அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெறும் வேட்கையுடன் இருக்கிறது.

பேட்டிங்கில் கேப்டன் வீராட்கோலி, ரோகித்சர்மா ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். இருவருமே ஒருநாள் தொடரில் இரண்டு சதம் அடித்து முத்திரை பதித்து இருந்தனர். இதுதவிர முன்னாள் கேப்டன் டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ், மனிஷ் பாண்டே போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

பந்துவீச்சில் பும்ரா மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் ஒருநாள் தொடரில் 15 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்து இருந்தார். இதுதவிர அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர்குமார் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி 20 ஓவர் போட்டியிலாவது வென்று ஆறுதல் அடையும் ஆர்வத்துடன் இருக்கிறது. வெற்றிக்காக அந்த அணி வீரர்கள் மிகவும் கடுமையாக போராடுவார்கள்.

இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 10 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 6 ஆட்டத்திலும், இலங்கை 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

நாளைய 20 ஓவர் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், டென் 3 டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, ரகானே, கேதர்ஜாதவ், டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ் பாண்டே, ராகுல், அக்‌ஷர் பட்டேல், பும்ரா, புவனேஷ்வர்குமார், யசுவேந்திர சாகல், குல்தீப் யாதவ், ‌ஷர்துல் தாக்கூர்.

இலங்கை: உபுல் தரங்கா (கேப்டன்), மேத்யூஸ், டிக்வெலா, தில்சான் முனவீரா, தாசுன்‌ஷன்கா, மிலின்டா ஸ்ரீவர்த்தனா, ஹசரன்கா, தனஞ்செயா, ஜெப்ரி வான்டர்சே, இசுரு உதனா, பிரசன்னா, திசாரா பெரைரா, மலிங்கா, லக்மல், விகும் சஞ்ஜெயா.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *