முக்கிய செய்திகள்

ஒற்றையாட்சி அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கான சாவுமணி!

2234

ஒற்றையாட்சி முறையிலான புதிய அரசியலமைப்பையே அரசாங்கம் முன்வைக்கவுள்ளதாகவும், ஒற்றையாட்சி அரசியலமைப்பானது தமிழர்களுக்கு சாவு மணியாக அமையவுள்ளது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘தமிழ் தேசத்தின் அடையாளத்தை அழிப்பதை நோக்காக கொண்டே அரசாங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. இதனால் தமிழ் தேசத்தின் அங்கீகாரத்தை உறுதிப்படுத்தி, தேசத்தின் நிலப்பரப்பை உறுதிப்படுத்தி, கலாச்சார மொழியை பாதுகாக்க வேண்டும். சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் வாழ வேண்டுமானால் சமஷ்டி அடிப்படையிலேயே நிம்மதியாகவும் பாதுகாப்புடனும் வாழ முடியும். எனினும் ஒற்றையாட்சி அடிப்படையில் அரசாங்கம் புதிய அரசியலமைப்பை முன்வைக்கவுள்ளதாகவும், இதற்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் அரசாங்கம் சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். எழுக தமிழானது ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் குரலாக நிருபிக்கப்படுகின்ற போது இனத்துக்கான வெற்றியாக நோக்கப்படும். தமிழ் இனத்தின் இருப்பை மக்கள் வலுவுடனே உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்த அவர், இந்தியாவை போன்று மக்கள் எழுச்சி இலங்கையிலும் ஏற்படும் போது புதிய சகாப்தம் ஒன்று உருவாகும் என குறிப்பிட்டார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *