மன்னார் வளைகுடா கடல் வழியாக சிறிலங்காவுக்கு கடத்த இருந்த 30 இலட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட ஏழு பேரை தேடி வருகின்றனர்.
மன்னர் வளைகுடா கடல் வழியாக சிறிலங்காவுக்கு தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக இந்திய கடலோர காவல்படைக்கு இரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் கடலோர காவல் படை மற்றும் தமிழக கடலோர காவல் குழு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சேரங்கோட்டை கடற்கரை பகுதியில் சந்தேகபடும்படி கிடந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் சிறிலங்காவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கபட்டிருந்தது தெரியவந்ததையடுத்து கடலோர காவல் படை அதிகாரிகள் கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படை மண்டபம் முகாமிற்கு எடுத்து சென்று எடையிட்ட போது அதில் 450 கிலோ கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்துள்ளது.