கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபையின் நிருவாகத்தின் கீழ் கொண்டுவரும் விதமாக போராட்டத்தை ஆரம்பிக்க 23 துறைமுக தொழிற்சங்கங்களும், 60 அரச மற்றும் அரச சார்பு தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் சிவில் மற்றும் மத அமைப்புகளும் ஒன்றிணைந்து தேசிய சபையை அமைத்துள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமத்தை இந்தியாவிற்கு வழங்குவதை உடனடியாக தடுத்து முழுமையான உரிமத்தையும் துறைமுக அதிகார சபைக்கே வழங்கவேண்டும் என்ற பிரதான கோரிக்கை உள்ளடங்கிய பிரேரணையை நாளை ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி நியமித்த குழுவிடமும் முன்வைக்கவுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் உரிமத்தில் 49 வீதத்தை இந்திய நிறுவனமொன்றுக்கு கொடுக்கும் தீர்மானம் அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தற்போது தொழிற்சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பினை உருவாக்கியுள்ளது.
இந்தியாவிற்கு வழங்கப்படும் 49 வீத உரிமமானது எந்த விதத்திலும் சிறிலங்காவுக்கு சாதகமான விளைவுகளை தராது. துறைமுகத்தின் பாரிய பங்கினை ஏற்கனவே சீனா தன்வசப்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்தியாவும் துறைமுகத்தில் ஒரு பங்கினை ஆகிரமிக்குமானால் இறுதியாக சிறிலங்காவுக்கு எந்தவொரு பங்குமே இல்லாது போகும் என்ற காரணியும் தொழிற்சங்களின் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.