கனடாவின் ஐந்து மாகாணங்களில் இன்று தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஏக நேரத்தில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கனடிய தமிழர் சமுகமும், கனடிய தமிழர் மாணவ சமூகமும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள தொடர் போராட்டத்தின் ஏழாவது நாளான இன்று பிற்பகல் 2 மணி முதல் ஐந்து மணி வரையில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஒட்டோவா நாடாளுமன்றத்தின் முன்பாகவும், ஒன்ராரியோ, அல்பேர்ட்டா, கியூபெக் ஆகிய சட்டமன்றங்களின் முன்பாகவும் வன்கூவரில் ஆட்ஸ்கலரி முன்பாகவும் அணிதிரட்ட புலம்பெயர் வாழ் உறவுகளும், மனித உரிமை, சமூகச் செயற்பாட்டாளர்களும் பாதாகைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் நீதிக் கோரிக்கையை விடுத்தனர்.


குறிப்பாக அனைத்துலக நீதிப்பொறிமுறைக்குள் சிறிலங்கா அரசினை கொண்டுவர வேண்டும், ஈழ தமிழர்களுக்கு நிகழ்ந்தது இன அழிப்பு என்பதை ஏற்று கொள்ள வேண்டும், ஈழ தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகள் சர்வதேசத்திடத்தில் முன்வைக்கப்பட்டது.
இதனைவிடவும், தாயகத்தில் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, இராணுவ பிரசன்னம், உள்ளிட்ட சிறிலங்கா அரசாங்கத்தின் பல்வேறு அடக்கு முறைச் செயற்பாடுகளையும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை புதன்கிழனை Yonge & Bloor சந்திப்பில் உள்ள ஜெர்மனியின் துணை தூதரலாயத்தின் முன்பாக மதியம் 2 மணிமுதல் 5 மணிவரை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது