முக்கிய செய்திகள்

கனடாவில் கொலையுண்ட ஈழத்தமிழனின் பேரவலம்

1459

கனடா ரொரன்ரோவை உலுக்கிக் கொண்டிருக்கும் மனிதக் கொலையாலியின் மர்ம முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட அவனது கொலை வெறிக்கு பலியான 8வது நபராக மேலும் ஒரு ஈழத்தமிழர் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 37 வயது நிரம்பிய கிருஸ்ணகுமார் கனகரத்தினமே கொலையுண்ட 8வது நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கொலையுண்டவர்களில் ஒருவராக 40 வயது நிரம்பிய ஸ்கந்தா நவரட்ணம் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் 66 வயது நிரம்பிய புரூஸ் மக்காத்தர் என்பவர் கொலைச் சந்தேகநபராக கைது செய்யப்பட்டிருந்தார். நிலங்களை ஒருங்கமைத்து அழகுபடுத்தும் தொழிiலை செய்து வந்த இவரின் தொழில் கூடங்களை சோதனையிட்ட பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பூக்கண்டுகளை நடுவதற்காக இவர் தயாரித்து வைத்திருந்த சாவடிகளுக்குள் கொலைசெய்து துண்டாடப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் எச்சங்கள் கிடைத்தன. அவற்றை அடையாளம் காணும் பணி தொடங்கியது. ஒவ்வொன்றாக ஏழு பேரை அடையாளம் கண்ட பொலிசாருக்கு சிலரை அடையாளம் காணுவது சிக்கலாகவே இருந்தது.

இந்நிலையில் தான் கொலை செய்தவர்களின் படங்களை மக்காதர் தனது கண்ணியல் சேகரித்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு படத்தையே பொலீசார் சமீபத்தில் வெளியிட்டனர். அதில் கிடைத்த துப்பின் அடிப்படையிலேயே கிருஸ்ணகுமார் அடையாளம் காணப்பட்டுள்ளார். பல விடயங்களை உடனடியாக வெளியிட பொலிசார் மறுத்துவிட்டாலும் கிடைக்கப்பட்ட விபரங்களின்படி 2010இல் சன் சீ கப்பல் மூலம் கனடாவை வந்தடைந்த 492 ஈழத்தமிழ் அகதிகளில் ஒருவரே கிருஸ்ணகுமார். இவரது அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்தே காணப்பட்டுள்ளராம். இதிலும் அவலம் என்னவென்றால் இவர் 2015 பிற்பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இவர் காணாமல் போயுள்ளதாக எவரும் பொலிசாருக்கு அறிவித்திருக்கவில்லை. இதனாலேயே இவரை அடையாளம் காண்பதில் இழுபறி நிலை இருந்திருக்கிறது.

இவரது நெருங்கிய உறவினர்கள் யாரும் கனடாவில் இல்லாத நிலையில் இலங்கையில் உள்ள இரத்த உறவுகளிடமிருந்து மரபணுக்கள் பெறப்பட்டே இவரது கொலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படு;கிறது. கொலை செய்யப்பட்டு இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள பலரும் ஓரினச்சேர்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கிருஸ்ணகுமார் அவ்வாறானவராக அடையாளம் காணப்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர். அதனால் மக்காதரால் கொலை செய்யப்படவர்களாக கருதப்படுவோர் குறித்த பட்டியல் மேலும் விரிவாக்கம் காணலாம் எனக் கருகப்படுகிறது.

ரொரன்ரோவில் குளிர்காலம் முடிவடைந்ததும் மேலும் 70 இடங்களில் தேடுதல்களை நடாத்த பொலிசார் தயாராகி வருகின்றனர். அத்துடன் 1975 முதல் காணாமல் போயுள்ளோர் பட்டியலையும் தூசு தட்ட ஆரம்பித்துள்ளனர். கனடாவின் பெரு நகரத்திலேயே ஒரு மனிதக் கொலையாளி வெறிகொண்டு தொடர் கொலைகளை செய்துவிட்டு இவ்வளவுகாலம் சுதந்திரமாக வாழ்ந்திருக்கிறான் என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை கிருஸ்ணகுமார் கொலை புலம்பெயர் தமிழினத்திடமும் பலகேள்விகளை எழுப்பியுள்ளது. புலம்பெயர் வாழ்வில் உறவுமுறை எம்மில் சிதைந்துவிட்டதா? ஒருவர் காணாமல் போயிருக்கிறார். எவ்வித அக்கறையும் செலுத்தப்படவில்லை. இன்று காலைமுதல் இவ்விடயம் முக்கியவிடயமாக பேசப்படுகிறது. . தாயகத்தில் தான் நாம் எதனையும் பெரிதாக கிழிக்கவில்லை. இங்குள்ள தமிழ்ர் விவகாரத்திலாவது குரல் கொடுக்கலாம் தானே? அகதியாக அடைக்கலம் தேடி இந்த மண்ணுக்கு தன் உயிரைக் காக்க வந்தவன் இந்த மண்ணிலேயே கொன்று புதைக்கப்பட்டிருக்கிறான்….
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *