கனடாவில் பனி காலமும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் சளிக்காச்சல் காலமும் அண்மித்துள்ள நிலையில், சளிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டின் சளிக்காய்ச்சல் காலப்பகுதியில் வெறும் 38 சதவீத பெரியவர்கள் மட்டுமே இந்த தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளதாக கனேடிய பொதுச் சுகாதாரத் திணைக்களத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், தமக்கு குறித்த இந்த தடுப்பூசி தேவையில்லை என்று கருதுவதாலும், குறித்த தடுப்பூசி சரியாக பயனளிக்கவில்லை என்பதனால் அதனைப் போட்டுக் கொள்ளவில்லை என்று பலரும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்ஃபுளூவன்சா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் அவ்வளவாக பலனளிக்கவிலலை என்று அண்மையில் வெளியான ஊடகச் செய்திகளும் இதற்கு மேலும் வலுச்சேர்ப்பதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தங்களுக்கு தேவையில்லை என்று கருதினாலும், தங்களின் அன்புக்குரியவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவேனும் அனைவரும் இவ்வாறான தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சுகாதார திணைக்கள அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.