கனேடியர்கள் இருவர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியும் கனேடியப் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்

317

கனேடியர்கள் இருவர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியும் கனேடியப் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தொலைபேசி ஊடாக இந்த உரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதை அமெரிக்க வெள்ளைமாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் மேலும் தகவல் வெளியிடுகையில், சட்டவிரோதமாக சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்கள் தொடர்பாகவும் இருதரப்பு வர்த்தக விவகாரங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் விவாதித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதேவேளை சீனாவில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்களின் விடுதலைக்காக அமெரிக்கா செயற்படுவது தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு பிரதமர் ஜஸ்டின் ரூடோ நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த இரண்டு கனேடியர்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு இரண்டு தலைவர்களும் இணங்கிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சீன நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி ஒருவரை வன்கூவரில் கனேடிய பொலிஸார் கைதுசெய்த சம்பவத்தினை அடுத்து குறித்த கனேடியர்கள் இருவரும் சீனாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கவே சீன தொலைபேசி நிறுவனமான ஹூவாவி நிதி அதிகாரியை கனேடிய அதிகாரிகள் கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *