முக்கிய செய்திகள்

கனேடிய அரசின் அமைச்சரவையில் கணிசமான மாற்றங்கள்!

1174

கனேடிய அரசின் அமைச்சரவையில் இன்று கணிசமான மாற்றங்கள் அறிவிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று அமைச்சரவையில் மாற்றங்களை அறிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முக்கிய சில அமைச்சுப் பதவி மாற்றங்கள் குறித்த ஊகங்களும் வெளியாக ஆரம்பித்துள்ளன.

அந்த வகையில் தற்போதய வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபான் டியோன் அந்த பதவியி்ல் இருந்து அகற்றப்பட்டு, அந்த பதவி தற்போதய அனைத்துலக வர்த்தக அமைச்சர் கிறிஸ்டியா ஃபிரீலான்டுக்கு வழங்கப்படும் என்று கருதப்படுகிறது.

வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபான் டியோன் பிரான்சுக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப்படக்கூடும் என்று முன்பு கூறப்பட்ட போதிலும், அவர் ஐக்கிய நாடுகளுக்கான கனடாவின் தூதுவராக நியமிக்கப்படக்கூடும் என்று அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல தற்போதய குடிவரவுத் துறை அமைச்சர் ஜோன் மக்கலமும் அந்த பதவியில் இருந்து மாற்றம் பெற்று, அவர் சீனாவுக்கான தூதராக நியமிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதேவேளை பெண்கள் விவகார அமைச்சு, சனநாயக நிறுவனங்களுக்கான அமைச்சு உள்ளிட்ட அமைச்சர்களின் பதவிகளிலும் மாற்றங்கள் அறிவிக்கப்படக்கூடும் எனவும், நிதி அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளர் ஃபிராங்கோயிஸ் ஃபிலிப்(Francois-Philippe), ஒன்ராறியோ நாடாளுமன்ற உறுப்பினர்களான அடம் வோன்(Adam Vaughan), மார்க்கோ மென்டொச்சீனோ(Marco Mendocino), கரீனா குலோட்(Karina Gould)ஆகியோருக்கு புதிதாக அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *