முக்கிய செய்திகள்

கல்முனை விவகாரத்தில் தமிழ் தரப்பிடம் மாத்திரம் விட்டுக்கொடுப்பை எதிர்பார்க்கக்கூடாது!

358

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரத்தில் தமிழ் தரப்பிடம் மாத்திரம் விட்டுக்கொடுப்பை எதிர்பார்க்கக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரத்தில் தமிழ் – முஸ்லிம் என இரு தரப்புக்களும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்புக்களைச் செய்து ஓரிரு நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து ஊடகமொன்றுக்கு அவர் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “விட்டுக்கொடுப்புக்களைச் செய்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டிய அவசியம் எமக்கும் இருக்கிறது. ஆனால் விட்டுக்கொடுப்பு இரு தரப்பிலும் இருக்க வேண்டும். எம்மிடமிருந்து மாத்திரமே அதனை எதிர்பார்கக்கூடாது.

ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

இந்த விடயத்தில் வெகுவிரைவில் சாதகமான தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்று நாம் இந்தப் பிரச்சினை ஆரம்பித்ததிலிருந்தே வலியுறுத்தி வருகின்றோம். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தீர்வினைத் தருவதாக எழுத்து மூலம் உறுதியளித்துள்ளார். எனினும் வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறான நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கோரியதைப் போன்று 10ஆம் திகதிக்கு முன்னர் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அல்லது பிரதமர் தீர்வை வழங்க முடியும் என்றால் அதற்கு முன்னர் எமக்கு தீர்வை வழங்க வேண்டும்.

கல்முனை விவகாரத்தில் தமிழ் தரப்புக்கு அநீதி இழைக்கப்படாமல் தீர்வுகள் எட்டப்பட வேண்டும். இதற்கு தமிழ் தரப்பும் முஸ்லிம் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

தமிழ் மக்களுடன் பரஸ்பரத்தைக் காட்டுவதற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பம் என்று ஹக்கீம் கூறியிருக்கிறார். அவர் கூறியதைப் போன்று அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. எனவே இந்த விடயத்தில் வெறுமனே அவரவர் கருத்துக்களை கூறிக்கொண்டிருப்பதைவிட சந்தித்து பேசி தீர்வை எட்டவேண்டும்” என மேலும் தெரிவித்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *