கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு P2P மக்கள் பேரெழுச்சி இயக்கம் அழைப்பு

36

யாழ். நல்லூரிலும், மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ மக்கள் பேரெழுச்சி இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இவற்றுக்கு வலுச்சேர்க்கும் முகமாக வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ். நல்லூர் – கிட்டு பூங்காவிலிருந்து நாளை மறுதினம் 17ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும், தமிழர்களுடைய மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற நீண்டகால அடிப்படை உரிமைக் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் போன்ற இரண்டு முதன்மைக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தமிழ் மக்களின் நீதி மற்றும் உரிமைகளுக்கான இந்தப் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்க அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கவேண்டுமென கோரப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *