முக்கிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது உணவுப் புறக்கணிப்பு போராட்டம் கடும் மழையின் மத்தியிலும் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

893

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் வவுனியாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உணவுப் புறக்கணிப்பு போராட்டமானது கடும் மழை மற்றும் குளிருக்கு மத்தியிலும் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 14 பேர் சாகும் வரையிலான தொடர் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தை வவுனியா தபால் நிலையம் அருகில் முன்னெடுத்து வருகின்றனர்.

பகல் பொழுதில் பலரும் வருகை தந்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்ற போதிலும், அவர்கள் இயலாத நிலையிலும், கடும்மழை, கடும் குளிர் என்பவற்றுக்கு மத்தியிலும் இரவுப் பொழுதை தனிமையில் கழித்துள்ளனர்.

இதனால் உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சிலரது உடல்நிலை பலவீனம் அடைந்துள்ளதனை அடுத்து, மருத்துவர்கள் அங்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டுள்ள போதிலும், தமக்கான உரிய பதிலை இந்த அரசாங்கம் வழங்காத பட்சத்தில் தாம் இறப்பதற்கும் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காணாமல்போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்ட களத்திற்கு சென்ற காவல்த்துறையினர், உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களிடம் தகவல்களை சேகரித்துள்ளனர்.

குறித்த இந்த போராட்டத்திற்கு ஆதரவுகள், குறிப்பாக இளைஞர்கள் அப்பகுதிக்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவிக்க முற்பட்டு வருவதுடன் அரசியலாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை போராட்ட களத்திற்கு சென்ற காவல்த்துறையினர், படிவமொன்றில் காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை திரட்டியுள்ளதுடன், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இவ்வாறு விபரங்களை திரட்டுமாறான இந்த உத்தரவு எங்கிருந்து காவல்த்துறையினருக்கு கிடைத்து என்பது தெரியாத நிலையிலும், காவல்த்துறையினரே தகவலை சேகரிப்பதால் காணாமல் போனோரின் உறவினர்கள் தகவலை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை வவுனியாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த காணாமல் போன உறவுகளின் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் நாளை முதல் அடையாள உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில் வவனியாவில் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளுக்கு ஏதாவது நேர்ந்தால்,அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும், அப்படி ஏதாவது நேர்ந்தால் அரசாங்கத்துக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பை மீளாய்வு செய்யவேண்டி வருமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எச்சரித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றில் இடம்பெற்ற திறைசேரிமுறி மோசடி குறித்த கோப் குழுவின் அறிக்கை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்றாதுள்ளதாகவும், இது விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்கின்றார் என்பதற்காக, ஒட்டுமொத்த கூட்டமைப்பினரோ அல்லது தமிழ் மக்களோ சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்வார்களென கருதக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆளும் கட்சியில் உள்ள எவருக்காவது கூற முடியுமா என்றும் நாடாளுமன்றில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியுமெனவும் குறிப்பிட்ட சிவசக்தி ஆனந்தன், ஆகக்குறைந்தது காணாமல்போன உறவுகள் உயிருடன் இருந்தால் இருக்கின்றனர் என்றும், இல்லையென்றால் கடந்த அரசால் கொலைசெய்யப்பட்டு விட்டனர் என்றாவது கூறமுடியுமல்லவா எனவும் வினவியுள்ளார்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் ஆணைக்குழுக்களை அமைப்பது, அந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை குப்பைத் தொட்டிக்குள் போடுவது போன்ற நிலைமைகளே நீடித்து வருவதாகவும் சாடியுள்ள அவர், காணாமல் போனவர்கள் குறித்து ஆராய கடந்த அரசு குழுவொன்றை அமைத்திருந்ததுடன், அந்தக் குழுவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சாட்சியமளித்திருந்த நிலையில், அவ்வாறான சாட்சிகள் தற்பொழுது குப்பையில் போடப்பட்டுள்ள என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் சாகும் வரையிலான உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் நாடாளுமன்றிலர் இருந்தோருக்கு தெரிவித்துள்ளார்.

இதில் பெண்கள் மற்றும் வயதானவர்களே கலந்து கொண்டுள்ளதாகவும், இவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள சிவசக்தி ஆனந்தன், காணாமல் போனவர்களின் உறவுகள் உள்ளடங்கலாக, வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவிலேயே தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *