முக்கிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் சரியான தரவு ஐ.நா வில் இல்லை என்று மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார்

870

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தரவுகள் சரியான முறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்படவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அமலராணி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 38 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொண்டதன் மூலம் இதனை அறிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் அதற்கு முன்னரும் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்ததும், கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், பலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர் எனவும், அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கோரி தமிழர் தாயகப் பகுதிகளில் மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இதுவரை தமக்கு நீதியை பெற்றுக்கொடுக்காது இலங்கை அரசு இழைத்துவரும் அநீதி குறித்து ஐ.நாவில் முறையிடுவதற்காக, வடக்கு கிழக்கு காணாமல் போனோரின் உறவினர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஜெனீவா சென்றிருந்ததுடன், இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதன்போதே போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்கள் சரியான முறையில் சென்றடையவில்லை என்பதை தாம் அறிந்து கொண்டதாக மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அமலராணி தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள காணாமல் போனோரது உறவினர்களையும், தமிழ் செயற்பாட்டாளர்களையும் சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களில் ஒன்றான உலக சிறிலங்கா பேரவை என்ற அமைப்பின் பிரதிநிதிகள் அச்சுறுத்தி இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் மட்டக்களப்பில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் இடம்பெறவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நிரந்தர அலுவலகத்தின் மக்கள் கருத்தறியும் செயற்பாட்டினை தாங்கள் எதிர்ப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அமலராணி தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *