முக்கிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிறலங்கா இராணுவ முகாமுக்குள் சென்றதைக் கண்டதாக நீதிமன்றில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது

565

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், குறித்த காணாமல் ஆக்கப்பட்ட இளைஞன் இராணுவ முகாமுக்குள் சென்றமையை நேரில் கண்ட நபர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை சாட்சியமளித்துள்ளார்.

கடந்த 1996ஆம் ஆண்டு அரியாலை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறி அவரது பேத்தியாரால்
யாழ்.நீதிமன்றில் கடந்த 2013ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், இந்த வழக்கு விசாரணையானது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நேற்றைய நாள் இதன் சாட்சி பதிவுக்காக யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி ரஞ்சித்குமார் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது இந்த வழக்கில் ஏற்கனவே இளைஞனின் தாயார் சாட்சியமளித்திருந்த நிலையில், நேற்றையநாள் மற்றுமொரு கண்கண்ட சாட்சியத்தின் சாட்சிப் பதிவுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இவ் வழக்கில் எதிர்தரப்பு சார்பாக சட்டமா அதிபர் திணைக்கள அரச சட்டவாதியே வழக்கினை நடாத்துவதாகவும் எனவே அவர் இன்றையநாள் சமூகளிக்காமையால் தவனையிடுமாறும் இராணுவ சட்டத்தரணி மன்றை கோரினார்.

இதே நேரம் இதற்கு தமது ஆட்சேபனையை தெரிவித்த பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி ரஞ்சித்குமார், குறித்த வழக்கில் முறைப்பாட்டாளரும், தற்போது சாட்சியமளிக்கவுள்ளவரும் மிகவும் வயது முதிர்ந்தவர்கள். எனவே இவ் வழக்கு விசாரணையை விரைவாக நடாத்த வேண்டும் என்று தனது வாதத்தை முன்வைத்தார்.

இது தொடர்பாக மன்றானது குறிப்பிடுகையில், குறித்த வழக்கில் முறைப்பாட்டாளர் வயது முதிர்ந்தவராக இருக்கும் நிலையில் விரைவாக நடாத்தி முடித்து அவருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், இவ் வழக்கு ஏற்கனவே மிக நீண்ட காலமாகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன் இனிமேலும் காலத்தை நீடிக்க முடியாது எனவும், அவரது வயது கருதி விரைவாக முடித்து நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும், இல்லையேல் இது மறுக்கப்பட்ட நீதியாகிவிடும் என்று குறிப்பிட்ட மன்றானது சாட்சிப் பதிவினை மேற்கொள்ள கட்டளையிட்டது.

இதன்படி தொடர்ந்து இடம்பெற்ற சாட்சி பதிவில் குறித்த சாட்சி ‘சம்பவ நாள் மாலை 5.45 மணியளவில் குறித்த இளைஞன் கொழும்புத்துறை இலந்தைகுளம் வீதியில் உள்ள புளியடி சந்தி இராணுவ முகாமுக்குள் சென்றதை தாம் கண்டதாக சாட்சியமளித்திருந்தார்.

இதன் பின்னர் மறு நாள் காலையிலேயே அவ் இளைஞன் காணாமல் போன விடயம் தெரியவந்ததாகவும் சாட்சியமளித்திருந்தார்.

இவ்வாறு இவரது சாட்சி பதிவினை தொடர்ந்து இவ் வழக்கின் தொடர் விசாரணைக்காக இந்த மாதம் 25ஆம் நாளுக்கு தவனையிட்டு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *