காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அடுத்தக்கட்ட பொதுமக்கள் சந்திப்பு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 14ஆம் நாள் யாழ்ப்பாணத்திலும், 15ஆம் நாள் கிளிநொச்சியிலும் இந்த மக்கள் சந்திப்பு இடம்பெற உள்ளதாக காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் 14ஆம் நாள் முற்பகல் 9 மணிமுதல் 10.30வரை நெடுந்தீவு ஊர்காவற்றுரை, வேலணை, காரைநகர், யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் தெல்லிப்பளை முதலான பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள காணாமல்போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட உள்ளது.
10.45 முதல் 12.15 வரை கோப்பாய், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி முதலான பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள காணாமல் போனோரின் உறவுகளுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதையடுத்து ஊடக சந்திப்பும், சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பும் இடம்பெற உள்ளது.
இதேவேளை 15ஆம் நாள் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில், முற்பகல் 9.30 முதல் 11.30 வரை காணாமல்போனோரின் உறவினர்களுடனும், 11.45 முதல் 12.45 வரை சிவில் சமூக பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இதையடுத்து ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.