முக்கிய செய்திகள்

காணி திணைக்களத்தின் கோப்புக்கள் நாளைய தினத்துக்குள் மீண்டும் யாழில்

34

அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண காணி திணைக்களத்தின் கோப்புக்களை நாளைய தினத்துக்குள் மீண்டும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் வாழ்வாதார அபிவிருத்திக் குழு கூட்டத்திலேயே அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் யாழ். மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களினதும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கோப்புகள் அநுராதபுரத்திலுள்ள அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது துறைசார் தரப்பினருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமே குறித்த கோப்புக்களை நாளைய தினத்தக்குள் மீண்டும் யாழ் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என பணித்திருந்தார்.

இதேவேளை அந்தக் கூட்டத்தில் பளை பிரதேசத்தில் காணி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை வெளி மாகாணத்தவர்களுக்கு வழங்கியமை தொடர்பில் பலதரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் வேறு மாகாணங்களை சேர்ந்தவர்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்ட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டதுடன் இராணுவத்தினரது பாவனையில் உள்ள காணிகள், அரச காணிகளை காணியற்றவர்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் ஒரு இலட்சம் முயற்சியாளர்களுக்கான காணி பகிர்ந்தளிப்பு போன்றவற்றிலும் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கே அப்பிரதேசங்களிலுள்ள காணிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா? என அமைச்சர் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வடமாகாண இணைப்பு அதிகாரி நிமலனிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த அந்த அதிகாரி அது உண்மைதான் என்று தெரிவித்திருந்தார்.

இதன்போது, அமைச்சர் மகிந்தனந்த அலுத்கமகே, வடக்கு மாகாண மக்களுக்கு உரித்தான காணிகள் அந்த மாகாண மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டதுடன், விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் துறைசார் தரப்பினர் நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *