காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் இராணுவ பாதுகாப்பு

144

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் இராணுவ பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று, மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

“கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு வாரமாக காத்தான்குடி பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையிலும், கடந்த சில நாட்களாக நடத்தப்படும்  பரிசோதனைகளில், தொடர்ச்சியாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் முடக்க நிலை முறையாக பின்பற்றப்படாமையே, தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இதுகுறித்து கலந்தாலோசிக்கப்பட்டு, இராணுவ பாதுகாப்பு நடைமுறைகள் காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி வீதியில் நடமாடுகின்றவர்கள், வீட்டுக்கு வெளியே வருகின்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு காவல்துறையினருக்கு இறுக்கமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அனுமதியின்றி பயணம் செய்யும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடமை ஆக்கப்படும்.” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின்  எண்ணிக்கை 1500ஐ கடந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *