முக்கிய செய்திகள்

காந்தி கொல்லப்பட்டு சரியாக 70 வருடங்கள்!வாழ்க நீ எம்மான்!

699

‘கண்நிகர் இந்தியத் தாயின்கைவிலங் கொடித்த ஞானிஎண்ணத்தில் அஹிம்சை கொண்டுஇயங்கிய மனிதத் தேனீஅன்பெனும் ஆயு தத்தைஆடையாய் அணிந்த மேனிஆயிரம் ஆண்டு காலம்மண்ணிலே உன்புகழ் வாழும்வணங்கினேன் வாழ்க வாழ்க!’சாதாரண ஆத்மாவாக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தன்னுடைய தன்னலமற்ற, அப்பழுக்கற்ற, புனிதமான, மக்களுக்கும், நாட்டிற்கும் ஆற்றிய மகத்தான சேவையால் மகாத்மா ஆனார். அவரை ‘மகாத்மா’ என்றழைத்து மகாகவி ரவீந்திரநாத் தாகூர் பெருமைப்படுத்தினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும், ”வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்,” என்ற கவிதையால் வாழ்த்து கூறி பெருமிதம் கொண்டார்.இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சென்று வழக்கறிஞராக பட்டம் பெற்று திரும்பிய காந்தியடிகள் தென்னாப்ரிக்காவில் பணிபுரிய சென்று அங்கு வாழ்ந்த ஒரு லட்சம் இந்தியர்களுக்காக ‘நேட்டால் இந்தியகாங்கிரஸ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அவர்கள் நலத்திற்காக, விடுதலைக்காக அஹிம்சை முறையில் அறப்போராட்டங்களை நடத்தி கொண்டிருந்தார்.

தமிழரின் வாழ்வு

அங்கு காந்தியின் தனி செயலாளராக வின்சென்ட் லாரன்ஸ் என்ற தமிழர் பணி புரிந்தார். காந்தியையும் அங்கு ஒப்பந்த கூலிகளாக பணிபுரிந்த தமிழர்களையும் பாலசுந்தரம் என்ற ஒப்பந்த கூலி தமிழரின் வழக்குத்தான் இணைத்தது. ஒப்பந்த கூலியாக ஒரு வெள்ளைக்காரரிடம் பணியாற்றி வந்த பாலசுந்தரம், அவருடைய முதலாளி தாக்கியதால் ஏற்பட்ட உதிரம் கொட்டும் உதடுகளோடு நீதி பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையோடு காந்தியை பார்க்க வந்தார். கிழிந்து போன உதடுகளுடன், நடுங்கும் உடலுடன் தன்னை பார்க்க வந்த பாலசுந்தரத்தின் பிரச்னையை, உதவியாளர் வின்சென்ட் லாரன்ஸ் மூலம் அறிந்து கொண்டு காந்தி நீதிமன்றம் சென்றார். பாலசுந்தரத்திற்கு நீதியும், வெள்ளை முதலாளிக்கு தண்டனையும் கிடைத்தது.காந்தி வாங்கித்தந்த பாலசுந்தரத்தின் வெற்றி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கொடிபறந்த நாடுகளில் வாழ்ந்த ஒப்பந்த கூலிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது. தங்களுக்காக போராட ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் உள்ளாரே என்று அவர்களுடைய மனதில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் ஏற்பட்டது. தமிழகத்திலும் காந்தியின் புகழ் பரவ தொடங்கியது. தென்னாப்ரிக்காவில் காந்தியின் சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டு நுாற்றுக்கணக்கான தமிழர்கள் சிறை சென்றனர். அதில் தில்லையாடி வள்ளியம்மை போன்று பெண்களும் சிறை சென்று மடிந்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் நாடு கடத்தப்பட்டனர். மேற்கூறிய காரணங்களால் காந்தியடிகள் தமிழர்களை மிகவும் நேசித்தார்.

தமிழக மகாத்மா

காந்தியடிகள் தமிழர்கள் குறித்து கூறும்போது, ”தமிழர்களை நான் சந்தித்த போது எனது உடன் பிறந்தவர்களை சந்திப்பது போன்று உணர்ந்தேன். போராட்டத்தின் கடுமையை தாங்கியவர்கள் தமிழர்கள். சத்தியாக்கிரகத்தில் உயிர்த்தியாகம் செய்தவர்களில் மிக அதிகமான பேர் தமிழர்கள். நாடு கடத்தப்பட்டவர்கள் தமிழர்கள். கூட்டம் ஒன்றிற்கு வரும்போது ரத்தப்பாசம் உள்ள உறவினர்களின் கூட்டம் ஒன்றிற்கு வருவதாகவே நான் உணர்கிறேன்,” என்றார். தமிழர்களின் மீதுள்ள அன்பின் காரணமாக காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு தன் வாழ்நாளில் இருபது முறைகள் வந்திருக்கிறார். 1896ல் முதல் முறையாக வந்தபோது 15 நாட்களும், 1915ல் இரண்டாம் முறையாக வந்தபோது 21 நாட்களும், 1934ல் 15வது முறையாக வந்தபோது 32 நாட்களும், இறுதியாக 1946ல் இருபதாவது முறையாக வந்த போது 15 நாட்களும் தங்கி இருந்திருக்கிறார்.

பாரதிக்கு பாராட்டு

காந்தியடிகள் 1896ல் தென்னாப்ரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கப்பலில் வந்தபோது தமிழ் நுால்கள் சிலவற்றை படித்து கொண்டு வந்திருக்கிறார். சென்னைக்கு வந்த அவர் தங்கி இருந்த நாட்களில் தமிழ் நுால்கள் பலவற்றை அவர் வாங்கி சேகரித்திருந்தது, அவரது வரவு செலவு கணக்குக் குறிப்பின் மூலம் தெரியவந்தது. ”சென்னையில் ஆங்கிலத்தில் பேசிய போதிலும் எனது சொந்த வீட்டில் இருப்பது போல் உணர்ந்தேன்,” என்று கூறியுள்ளார். 26.3.1937ல் காந்தியடிகள் சென்னைக்கு வந்து தென்னிந்திய இந்தி பிரசார சபையின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது, ”எனக்கு தென்னிந்திய மொழிகள் பற்றி ஒன்றுமே தெரியாது என்பதில்லை. தென்னாப்ரிக்கா சிறை வாழ்க்கையின் போது தமிழ் கற்றுக்கொள்ள முயன்றேன். ஆனால் அந்த வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது,” என்றார். காந்தியடிகள் தமிழில், ”பாரதி ஞாபகார்த்த பிரயத்தனங்களுக்கு என் ஆசீர்வாதம். மோ.க.காந்தி,” என்று தன் கைப்பட சுப்பிரமணிய பாரதிக்கு எழுதி அனுப்பிய வாழ்த்து செய்தியும், அவர் தமிழ் மீது வைத்திருந்த ஆர்வத்தையும் பற்றையும் எடுத்து காட்டுகிறது.

காந்தி மயூசியம்

காந்தியடிகள் அவருடைய மகன் தேவதாஸ் காந்திக்கு, ராஜாஜியின்மகள் லட்சுமியை திருமணம் செய்து வைத்து தமிழ்நாட்டின் சம்பந்தியானார். 22.9.1921ல் காந்தியடிகள் மதுரைக்கு வந்தார்.வரும் வழியில் மதுரைக்குஅருகில் விவசாயிகளையும், அவர்கள் அணிந்திருந்த அரை ஆடைகளையும் பார்த்தார். மதுரை மேலமாசிவீதியில் ஓர் இல்லத்தில் தங்கி இருந்தார். இனி இடுப்பில் ஓர் உடையுடன் மட்டுமே இருக்கப்போவதாக உறுதி கொண்டு அங்கு தனது உடையில் பெரும் மாற்றம் செய்து கொண்டார். அந்த நிகழ்வு குறித்து மதுரை ரயில் நிலையத்தில் ஓர் அறிவிப்பு பலகை வைத்திருக்கிறார்கள்.அதில் இப்படி எழுதப்பட்டுள்ளது.”வறுமையில் வாடித்தவிக்கும் பாமர மக்களில் தானும் ஒருவர் என்பதை உணர்த்தும் வகையில் காந்தியடிகள் 1921 செப்டம்பரில் இந்நகரில் தான் முழந்தாள் வரை ஆடை உடுத்தும் விரதத்தை மேற்கொண்டார். 1946ல் பிப்ரவரியில் அவர் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார்”அகிலத்திற்குஅஹிம்சையை போதித்த அந்த மகாத்மா தன் வாழ்வின் இறுதி நாளில் வன்முறைக்கு பலியாகி மரணமடைந்தபோது உடுத்தியிருந்த ரத்தம் தோய்ந்த ஆடை, அவர் அரைஆடை உடுத்தும் விரதத்தை மேற்கொண்ட அதே மதுரையில் காந்தி மியூசியத்தில் வைக்கப்பட்டுஉள்ளது.இந்தியா, வெள்ளையர் ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டிருந்த போது பிறந்த காந்தியடிகள் தன் அஹிம்சைப் போராட்டத்தின் மூலம் சுதந்திரம்வாங்கித் தந்தார். இன்று இங்கு வாழும் எழுபத்தைந்து சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்கள்.காந்தியடிகள், சமுதாயத்திற்குத் தீங்கு செய்து, சமுதாயத்தைச் சீரழிக்கும் ஏழு பாவங்களை குறிப்பிட்டிருக்கிறார்.அவை…கொள்கையற்ற அரசியல்,உழைப்பற்ற செல்வம்,நெறியற்ற வாணிபம்,பண்பாடற்ற கல்வி,மனச்சாட்சியற்ற மகிழ்ச்சி,மனிதாபிமானமற்ற அறிவியல்,தியாகமற்ற வழிபாடுஇந்த சமுதாய தீமைகளை களையும் முயற்சியில் ஈடுபடுவது தான் சுதந்திர இந்தியாவில் பிறந்த, சுதந்திரத்தை அனுபவித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தியனின் கடமையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அவற்றை களைந்து ஒழிப்பது தான் நாம் தேசப்பிதாவிற்கு செய்ய கூடிய உண்மையான அஞ்சலி.-
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *