இந்திய மத்திய அரசாங்கம் அமைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியுள்ள நிலையில், அதில் சம்பந்தப்பட்ட தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும், குறிப்பாக, ஆணையத்தின் விதிகள், செயல்பாட்டு முறைகள், கூட்டங்களுக்கான நடைமுறைகள் போன்றவை பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சக பணியத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்கும் இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசின் சார்பில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் பிரபாகரன் பங்கேற்றுள்ளார்.
இதனிடையே இன்று தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள முதல்வர் பழனிச்சாமி, காவிரி ஆணையத்தின் முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.