காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க சீனா, பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வி

220

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் மற்றும் சீனா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஜம்மு காஷ்மீரில் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த ரகசிய கூட்டத்தில் பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்ட விதி 370-வது பிரிவை இந்திய அரசு திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றியது.
இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தலையிடும் படி பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட உலக நாடுகள் நிராகரித்தன.
இந்நிலையில் பாகிஸ்தான் வலியுறுத்தியதன் பேரில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலிடம் சீனா

வியாழனன்று கோரியது.  ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர அங்கத்தினரான சீனாவின் கோரிக்கையை ஏற்று மறுநாளே- ஆகஸ்ட் 16ம் தேதி ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ரகசிய ஆலோசனை நடத்தப்படும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.

அதன்படி நேற்றிரவு 7.30 மணிக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் குறித்து ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய பிரதிநிதி டிமிட்ரி போலென்ஸ்கி ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவளித்ததாக கூறினார்.

மேலும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிடக்கூடாது.  இந்த பிரச்சனையை இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று டிமிட்ரி போலென்ஸ்கி தெரிவித்தார்.

அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஆப்பரிக்க நாடுகள் உட்பட ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பெரும்பாலான உறுப்பு நாடுகள் ரஷ்யாவின் நிலைப்பாட்டையே கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக மாற்ற சீனா மற்றும் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன.

இந்தியாவின் ஐநா தூதர் பேட்டி

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு பின் இந்தியாவுக்கான ஐநா தூதர் சையத் அக்பருதின் சர்வதேச பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். காஷ்மீர் மற்றும் சட்டப்பிரிவு 370 தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர்களிடம் அறிக்கை வெளியிட்டார்.

அதன்பின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயார் என்று சையத் அக்பருதின் அறிவித்தார்.  தனக்கான முதல் 3 கேள்விகளை பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு வழங்கினார்.

அப்போது பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா ஒப்புக்கொள்ளுமா என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சையத் அக்பருதின் பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அடிப்படையான சில தூதரக நடைமுறைகள் உள்ளன. அதுதான் வழக்கமான நடைமுறையும் கூட. ஆனால் எந்த ஒரு சதாரண நாடும் பயங்கரவாதம் மூலம் தன் லட்சியத்தை அடைய முயற்சிக்காது. எந்த ஜனநாயகமும் அதை ஏற்காது. பயங்கரவாதத்தை நிறுத்துங்கள், பேச்சுவார்த்தையை துவக்குங்கள்’’ என்று சையத் அக்பருதின் தெரிவித்தார்.

அப்போது பாகிஸ்தானை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எப்போது பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தையை துவங்கும் என கேட்டார்.

அதற்கு சையத் அக்பருதின் உங்களுடன் கைகுலுக்குவதன் மூலம் அதை துவங்குகிறேன் என கூறி மூத்த பத்திரிகையாளரிடம் வந்து கைகுலுக்கினார். பின் அங்கிருந்த மற்ற 2 பாகிஸ்தான் பத்திரிகையாளர்களிடமும் புன்னகையுடன் கைகுலுக்கினார்.

‘‘சிம்லா ஒப்பந்தத்தை கடைபிடிப்பதில் இந்தியா முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. எங்கள் நட்புகரத்தை இன்று நீட்டிவிட்டோம். பாகிஸ்தானின் பதிலுக்காக இனி காத்திருப்போம்’’ என்று சையத் அக்பருதின் தெரிவித்தார். சையத் அக்பருதினின் இந்த செய்கையை செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பலர் கைதட்டி வரவேற்றனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *