முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும் இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள் காணப்பட்டமை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

418

கிளிநொச்சி பண்ணங்கண்டி பிரதேசத்தில் நீர்ப்பாசன வாய்க்கால் பகுதிக்குள் இன்று காலை காணப்பட்ட இளம் யுவதியின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி வசந்தநகரைச் சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி கொலை செய்யப்பட்ட பின்னர் நீர்ப்பாசன வாய்க்கால் பகுதிக்குள் கொண்டு சென்று போடப்பட்டிருக்கலாம் என்று வலுவாக நம்பப்படுகிறது.

சடலத்தில் உள்பாவாடை உள்ளிட்ட உள்ளாடைகள் மாத்திரமே காணப்பட்டதாகவும் மேலாடைகள் எதுவுமே காணப்படவில்லை எனவும், காதில் தோடும் காணப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சடலத்தின் சுற்றுப்புறச் சூழலில் பாதுகாப்புத் தரப்பினர் பயன்படுத்தும் இடுப்பு பட்டி, ஒரு கோர்வையில் நான்கு திறப்புக்கள், பியர் ரின், நீலம் மற்று மஞ்ள் நிறங்களில் செருப்புக்கள் இரண்டு சோடி, கால் சங்கிலி, சிவப்பு பேனா ஒன்று நீல பேனா ஒன்று ஆகிய சான்றுப்பொருட்கள் காணப்பட்டுள்ளன.

அத்துடன் அவர் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் வகையில் கழுத்தில் கறுப்பு அடையாளம் காணப்படுவதுடன், முகமும் சேதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

சடலத்தின் கால்களில் கரி படிந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களில் எரிக்கப்பட்ட வைக்கோல்கள் மத்தியில் சடலம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

அத்தோடு சடலம் காணப்படும் இடத்தின் சூழலில் சிதறி கிடக்கும் சான்றுப்பொருட்களை அவதானிக்கின்ற போது, குறித்த பகுதியில் சடலமாக காணப்படும் யுவதிக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் இடையே முரண்பாடுகளும், இழுபறிகளும் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பலமாக சந்தேகிக்கப்படுகிறது

சம்பவ இடத்திற்கு பிற்பகல் 2.45 மணிக்கு சென்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்டுள்ளதோடு, சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *