முக்கிய செய்திகள்

கிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்

326

கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பு இனரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது பாதகமான விளைவுகளை ஏற்படும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்கான போட்டிப் பரீட்சை கடந்த யூலை 14 ஆம் நாள் நடத்தப்பட்ட போது, இனரீதியிலான அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும் என்பதற்கான எந்தவொரு பிரத்தியேக பிரிவுகளும் கொடுக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் தற்போது கிழக்கு மாகாண சபையின் சில நிர்வாக உத்தியோகத்தர்களினால் ஆட்சேர்ப்பிற்கான வெட்டுப்புள்ளிகள் இனரீதியில் அறிவிக்கப்பட்டுளளதாகவும், ஆட்சேர்ப்பு தொடர்பில் இப்படியான ஒரு நடைமுறை முன்னர் எப்போதும் பின்பற்றப்படவில்லை என்பதோடு, இது அப்பட்டமான ஒரு பாகுபாடு காட்டும் அநீதியான செயலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்த அடிப்படையில் இப்படியான ஒரு தீர்மானத்தினை உத்தியோகத்தர்கள் எடுத்தார்கள் என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை எனவும், இந்த நடவடிக்கையானது கிழக்கு மாகாணத்தில் தனிப் பெரும்பான்மை சமூகமான தமிழ் மக்களுக்கு குறிப்பிடத்தக்க பாதக விளைவுகளை உருவாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

30 ஆண்டுகள் நிலைத்த ஆயுத போராட்டமானது, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களிலேயே இடம்பெற்றது எனவும், இதன் நிமித்தம் தமிழ் பாடசாலைகள் தேவையான ஆசிரியர்களும் ஏனைய சலுகைகளும் இன்றி இயங்காத நிலைக்கு தள்ளப்பட்டதனால், இந்த பிரதேசங்கள் கல்வியில் பின்னோக்கி நகர நேர்ந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பின்னணியில் எவ்வாறு வெட்டுப்புள்ளிகள் முடிவு செய்யப்பட்டது என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை எனவும், எனவே அனைத்து விண்ணப்பதாரிகளும் சமமாக நடாத்தப்படுவதையும், இன அடிப்படியில் எந்தவொரு பாகுபாடும் காட்டப்படாமல் இருப்பதனையும், நீதி நிலைநாட்டப்படுவதனையும் உறுதி செய்யும் முகமாக உரிய திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மிக வினயமாக கேட்டுக்கொள்வதாகவும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இரா சம்பந்தனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *