கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை யாருக்கும், விற்கவோ, குத்தகைக்கு விடவோ அல்லது அது தொடர்பில் வெளிநாட்டுடன் எந்தவொரு உடன்பாடும் செய்து கொள்ளவோ போவதில்லை என்று சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிழக்கு முனைய சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“கிழக்கு முனையம் எமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு உள்ளேயே இருக்கும்
எமது தீர்மானம் குறித்து துறைமுக தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கவுள்ளோம்.
ஆகவே, பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை.
அமைச்சரவையிலுள்ள 95 வீதமானவர்கள், கிழக்கு முனையத்தை வெளிநாட்டவர்களுக்கு வழங்கக்கூடாது என்ற நிலைபாட்டிலேயே உள்ளனர்.
தேசிய வளங்களை விற்பனை செய்வது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை.
அந்த கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு எமது அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்யவில்லை” என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 22 தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை சிறிலங்கா ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும், கிழக்கு முனையம் சிறிலங்கா துறைமுக அதிகார சபையினாலேயே நிர்வகிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவ தெரிவித்துள்ளார்.
வியத்மக அமைப்பின் தலையீட்டினால் இந்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கு மாற்றாக இந்தியாவின் முதலீட்டுடன், கொழும்பு மேற்கு கொள்கலன் முனையத் திட்டத்தை முன்னெடுக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.