முக்கிய செய்திகள்

குல்புஷன் ஜாதவ் வழக்கு விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் …

409

இந்திய உளவாளி என குற்றம்சாட்டப்பட்டு பாகிஸ்தானால் மரண தண்டனை விதிக்கப்பட்ட  குல்புஷன் ஜாதவ் தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஐநாவின் சர்வதேச நீதிமன்றத்தில் துவங்கியது.

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரரான குல்புஷன் ஜாதவ் கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவர் ஒரு இந்திய உளவாளி என குற்றம்சாட்டி 2017ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்புஷன் ஜாதவிற்கு மரண தண்டனை வழங்கியது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. குல்புஷன் ஜாதவை நேரில் சந்திக்க இந்திய தூதருக்கு அனுமதி அளிக்கும்படி இந்தியா தரப்பில் பலமுறை கோரிக்கை விடப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அதை ஏற்கவில்லை.

அதனால் குல்பூஷன் ஜாதவ் உயிரை காப்பாற்றுவதற்காக நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

விசாரணையில் குல்புஷன் ஜாதவை தூக்கிலிட சர்வதேச நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த வழக்கு 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி விரிவான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சர்வதேச நீதிமன்றம் அறிவித்தது.

அதன்படி பிப்ரவரி 18ஆம் தேதி (இன்று) குல்புஷன் ஜாதவின் வழக்கு விசாரணை துவங்கியது. நான்கு நாட்களுக்கு இந்த விசாரணை நடைபெறவுள்ளது.

இந்திய வழக்கறிஞர் வாதம்

இன்று நடைபெற்ற விசாரணையில் குல்புஷன் ஜாதவை விடுதலை செய்யக்கோரி இந்திய வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தன் தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

அப்போது குல்புஷன் ஜாதவ் விவகாரத்தை இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரமாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக ஹரிஷ் சால்வே குற்றம்சாட்டினார்.

குல்புஷன் ஜாதவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை. குல்புஷன் ஜாதவை கைது செய்து ஒரு மாதத்துக்கு பின்பு தான் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தூதரக அதிகாரிகள் குல்புஷன் ஜாதவை சந்திக்க அனுமதிக்கும்படி இந்தியா தரப்பில் 13 முறை கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் இதுவரை அனுமதி தரவில்லை.

குல்புஷன் ஜாதவுக்கான உரிமைகளை பாகிஸ்தான் வழங்கவில்லை.பாகிஸ்தானின் இந்த செயல் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று ஹரிஷ் சால்வே நீதிபதிகளிடம் வலியுறுத்தினார்.

ஜாதவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்க பாகிஸ்தான் தயங்குகிறது என்றும் ஹரிஷ் சால்வே சாடினார்.

நாளை (பிப்ரவரி 19-ம் தேதி) விசாரணையின்போது பாகிஸ்தான் ராணுவம் கண்டறிந்த உண்மைகள் மற்றும் ஆவணங்களை முன்வைத்து பாகிஸ்தான் வழக்கறிஞர் ஹவார் குரேஷி வாதாடுவார்.

பாகிஸ்தானின் வாதங்களுக்கு பிப்ரவரி 20ஆம் தேதி இந்திய வழக்கறிஞர் சால்வே பதில் சொல்ல சர்வதேச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிப்ரவரி 21ம் தேதி பாகிஸ்தான் தன் இறுதி வாதத்தை முன் வைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்துடன் விசாரணை முடிவுக்கு வரும்.

குல்புஷன் ஜாதவ் வழக்கில் வரும் மே அல்லது ஜூன் மாதங்களில் சர்வதேச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *