முக்கிய செய்திகள்

கூட்டமைப்பு, ஈபிடிபி தவிர்ந்த கட்சிகளை பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிட வருமாறு முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்

474

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும்- ஈபிடிபி தவிர்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளை பொதுச் சின்னத்தின் கீழ், தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட வருமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த மாதம் 24 ஆம் நாள் சிறப்பு பெருங் கூட்டத்தின் போது தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியின் உருவாக்கம் பற்றி அறியத்தரப்பட்டது எனவும், அவ்வாறான உருவாக்கத்தின் பின்னரான சூழ்நிலை பற்றியும் தொடர்பு நிலை பற்றியும் இன்று பரிசீலிக்க வேண்டியுள்ளதாய் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது மக்களின் பிரச்சினையைக் கையாண்ட விதத்தில் தனக்கு எள்ளளவும் உடன்பாடு இருக்கவில்லை எனவும், அவர்கள் கொள்கை பிறழ்ந்தார்கள் என்று நம்பியதால்தான் அவர்களுடன் முரண்பட்டு வெளியேறிதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காக இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் அமைப்பின் மீதோ அதன் தலைவர் சித்தார்த்தன் மீதோ தனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வித கோப தாபங்களும் இல்லை எனவும். அரசியலில் நண்பர் சித்தார்த்தனின் அணுகுமுறை வேறாக இருக்கலாம் என்ற போதிலும், அவருடன் இணைந்து பல வேலைகளை தமிழ் மக்கள் பேரவையில் முன்னெடுத்திருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்சி ரீதியாக கூறு போடும் வேலையை தான் செய்யமாட்டேன் எனவும், அதேவேளை, கொள்கை ரீதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முரண்பட்டு வெளியேறிய கட்சிகள் இங்கு இருக்கும் நிலையில், அவர்களுடன் கொள்கை அடிப்படையில் ஒற்றுமையாக இணைந்து அரசியலில் செயற்படுவதே தனது விருப்பம் என்றும் அவர் விபரித்துள்ளார்.

அந்த வகையில் மாற்றுத் தலைமைத்துவத்தை உருவாக்கக் காலம் கனிந்துள்ளது என்றும், தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளுடன் நாம் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தான் எந்தக் கட்சிக்கும் பக்க சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது எனவும், அது எமக்கிடையிலான ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதுடன் பிரிவினைகளை மேலும் ஏற்படுத்தும் எனவும், தமிழ் மக்கள் பேரவைக்குள் பிளவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதனால் தான் எந்தக் கட்சிக்கும் சார்பாகச் செயற்படாமல் ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும் EPDP தவிர்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளை அழைக்கிறேன் என்றும் அவர் விபரித்துள்ளார்.

மீண்டும் மீண்டும் எமக்குள்ளேயே குரோதங்களையும் விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு தொடர்ந்தும் எமக்குள் முரண்பட்டுக்கொண்டிருக்கும் நிலைமைகளுக்கு இடங்கொடாமல், எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு ஊடாகத் தேர்தல் அரசியலை பயன்படுத்திக்கொள்வதற்கு தன்னுடன் கைகோர்க்குமாறு அழைப்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொள்கை அடிப்படையில் நாம் ஒன்றாக செயற்படுவோம் எனவும், எங்களுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடுகளை எமது மக்களின் நன்மை கருதி களைந்துகொள்ளுவோம் என்றும், தம்முடன் ஒத்த கருத்துடைய யாவரும் இணையுமாறும், நாம் கொள்கையில் பற்றுறுதி கொண்டு செயற்படுவோம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *