கேப்பாப்பிலவு போராட்டம் 6ஆவது நாளாகவும், புதுக்குடியிருப்பு சத்தியாக்கிரகம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது

1257

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள் இரவு பகலாக முன்னெடுத்துவரும் சத்தியாக்கிரக போராட்டம், ஆறாவது நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமையும் தொடர்கின்றது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் இப்பகுதி மக்களுக்குச் சொந்தமான காணிகளை கையகப்படுத்தி விமானப்படையினரும் ராணுவத்தினரும் முகாமிட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி குறித்த காணிகள் அளவிடப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்படும் என தெரிவித்த அதிகாரிகள் எனினும் அங்கு வராத தராததால் ஆத்திரமுற்ற மக்கள் தமது மண்ணை மீட்பதற்காய் அன்றுமுதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய சுதந்திர தினத்தை இம்மக்கள் கறுப்பு நாளாக அனுஷ்டித்தனர். இவர்களுக்கு ஆரவாக கேப்பாப்பிலவு மக்களும் ஒன்றிணைந்து பேரணியொன்றையும் நடத்தியிருந்தனர்.

சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள மக்களை வடமாகாண சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மற்றும் விமானப்படை அதிகாரி ஆகியோர் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இம்மக்களின் போராட்டம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாக அமைச்சர் ரிஷாட் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ராணுவ தலைமையகத்தை அகற்றி, காணிகளை விடுவிக்குமாறு கோரி, புதுக்குடியிருப்பில் சத்தியாக்கிரகம்:-

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மத்தியில் படையினர் வசமுள்ள காணிகளையும் வீடுகளையும் விடுவிக்குமாறு கோரி அப்பிரதேச மக்கள் முன்னெடுத்துவரும் சத்தியாக்கிரக போராட்டம், மூன்றாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கின்றது.

கேப்பாப்பிலவில் விமானப்படைத்தளம் அமைக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாகவே புதுக்குடியிருப்பு மக்களின் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் புதுக்குடியிருப்பு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவத்தின் 68ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தை அங்கிருந்து அகற்றி தமது காணிகளையும் வீடுகளையும் விடுவிக்குமாறு கோரி புதுக்குடியிருப்பு மக்கள் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து, பந்தல் அமைத்து இரவு பகலாக மக்கள் இப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *