முக்கிய செய்திகள்

கேப்பாப்பிலவு விவகாரம் குறித்துப் பேசுவதற்காக இரா சம்பந்தனுக்கு இலங்கை சனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

1828

கேப்பாபிலவு காணிகள் விடுவிப்பு விவகாரம் தொடர்பில் முக்கிய பேச்சுக்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு, இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

அடுத்த வாரம் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று சனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கேப்பாபிலவில் சிறிலங்கா இராணுவத்தினர் வசம் உள்ள 302 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி, அந்த நிலங்களின் உரிமையாளர்களான மக்கள் கடந்த 215 நாள்களாகத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காணி விடுவிப்புத் தொடர்பில் கடந்த மே மாதமும் சிறிலங்கா படைத்தரப்பினருடன் சந்திப்பு நடைபெற்ற நிலையில், இதன் தொடர்ச்சியாக சனாதிபதியுடன் கூட்டமைப்பின் தலைவர் நடத்திய பேச்சுக்களின்போது, யூன் மாத இறுதிக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என்ற உறுதி வழங்கப்பட்ட போதிலும், அது பின்னர் நிறைவேற்றப்படவில்லை.

இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால், இலங்கை சனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கும் மிகக் காட்டமான கடிதம் யூலை மாத இறுதியில் அனுப்பப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விரைவில் பேச்சு நடாத்தப்படும் என்று சனாதிபதியின் செயலரால் உறுதி வழங்கப்பட்டிருந்ததுடன், நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் தரப்பினருடன் சந்திப்பு நடைபெற்றிருந்தது.

இதன் பின்னரும் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் தமிழ் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், கேப்பாபிலவு விடயம் தொடர்பில் இறுதியான -தீர்க்கமான முடிவு எடுப்பதற்காக, சனாதிபதியுடன் விரைவில் சந்தித்துப் பேச்சு நடாத்தவுள்ளதாக கூறியிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே சந்திப்புக்கான அழைப்பு இல்ஙகை சனாதிபதியினால், இரா.சம்பந்தனுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *