முக்கிய செய்திகள்

கேப்பாவிலவு மக்களின் போராட்டத்துக்கு விக்னேஸ்வரன் ஆதரவு – நேரில் சந்தித்தார்

1288

கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்களின் காணிப்பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி, காணிகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று ஐந்தாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த முதலமைச்சர், முல்லைத்தீவு மாவட்டம் – கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்களின் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிவித்துள்ளார். ஆனால், குறித்த காணிகள் இதுவரை விடுவிக்கப்படாது விமானப்படை வசம் உள்ளமை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்படாது இருக்கலாம்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டு கடும் குளிரையும், வெயிலையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். அதேபோன்று தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களின் இப்போராட்டம் நியாயமானது என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே, கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விமானப்படை அதிகாரி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

காணி விவகாரம் தொடர்பில் கேப்பாபுலவில் நிலைகொண்டுள்ள விமானப்படையினர் மேலிட உத்தரவுக்கு காத்திருப்பதாகவும் உத்தரவு கிடைத்ததும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும், தம்மிடம் தெரிவித்ததாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மக்களிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மக்களின் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கேப்பாபுலவில் விமானப்படையின் பிரதான நுழைவாயிலிருந்து புலவுக்குடியிருப்பு வரை காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களால் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை கறுப்புக்கொடிகளை ஏந்திய வண்ணம் பொதுமக்கள் பேரணியாக சென்றனர்.

காலியில் சுதந்திரதினம் வீதியில் நாம், விடுதலை எமக்கு எப்போது?, எமது மண்ணை ஆக்கிரமித்து நம்மை வீதியில் அலையவிட்டு நல்லிணக்கம் பேசுதல் முறையா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை பேரணியில் ஈடுபட்ட மக்கள் ஏந்தியிருந்தனர்.கேப்பாப்பிலவு மக்களை முதலமைச்சர் நேரில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *