கொங்கோவில் ரம்ழான் பண்டிகை தொடர்பாக இடம்பெற்ற மோதல்களில் தொடர்புடைய 29 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு தலைநகர் கின்ஷாசாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பது தொடர்பாக முஸ்லிம்களின் இரு பிரிவினரிடையே முரண்பாடு ஏற்பட்டு, பெரும் கலவரமாக வெடித்தது.
கலவரத்தை தடுக்க முயன்ற காவல்துறையினர் மீது இரு தரப்பினரும் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் ஒரு அதிகாரி கொல்லப்பட்டதுடன், காவல்துறை வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன.
இந்த கலவரம் தொடர்பாக 41 பேர் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் வழக்கு விசாரித்து முடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 31 பேரில் 29 பேருக்கு மரண தண்டனையும், இரண்டு பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.