கொடிய போர் அழிவுகளின் நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்

317

கொடிய போர் அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இல்ஙகை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போர் நிறைவடைந்துள்ள நிலையில், போர் அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் வகையில் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுச் சின்னங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் தற்போதுதான் தமது கொடிய அழிவுகளின் விளைவுகளையும், அதனால் ஏற்பட்ட தாக்கங்களையும் மெல்ல மெல்ல மறந்து வருகின்றனர் எனவும், இந்த நிலையில் வடக்கு மக்களுக்கு அவசியமற்றதும், போர்வடுக்களின் நினைவுகளை மீள நினைவூட்டுவதுமான அந்த நினைவுகளை எமது பிரதேசங்களில் இருந்து, குறிப்பாக வடக்கில் வைத்திருக்கவேண்டிய தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆகின்ற போதிலும், இவ்வாறான நினைவுச்சின்னங்கள் வடக்கில் காணப்படுவது, தொடர்ந்தும் மக்களின் மனங்களில் வேதனையையும் கொடிய நினைவுகளையும் ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாட்டின் சனாதிபதி என்ற வகையின் இவ்வாறான செயற்பாடுகளை கவனத்திற்கொண்டு, குறித்த இராணுவ நினைவுச் சின்னங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *