கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனையம் வெளிநாடுகளுக்கு வழங்கப்படாது; சிறிலங்கா ஜனாதிபதி

40

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது என துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் கோரியபடி கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முன்னைய அரசாங்கம் ஒப்புக்கொண்ட நிலையில், இது தொடர்பாக தற்போதைய அரசாங்கமும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

எனினும், நாட்டின் இறையாண்மை அல்லது சுதந்திரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் நாட்டில் எந்தவொரு முதலீட்டையும் அனுமதிக்க மாட்டேன் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை, பிராந்திய புவிசார் அரசியல் காரணிகள், நாட்டின் இறையாண்மை, வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் ஆய்வுசெய்த பின்னர் கிழக்கு முனைய வளர்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், முதலீட்டுத் திட்டத்தின் கீழ் கிழக்கு முனையம் நிலையான முறையில் அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி விளக்கியுள்ளார்.

மேலும், கிழக்கு முனைய மறு ஏற்றுமதி நடவடிக்கைகளில் இந்தியா 66 வீதம் பங்களிப்புச் செய்கிறது. இதனைவிட ஒன்பது வீதம் பங்களாதேஷூம் மற்றும் மீதமுள்ளவையில் பல நாடுகளும் மறு ஏற்றுமதி நடவடிக்கையை செய்கின்றன.

51 வீத உரிமையுடன் இலங்கை அரசாங்கத்திற்கும், மீதமுள்ள 49 வீதம் இந்தியா மற்றும் பிற பங்குதாரர்களுக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாக முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் உள்ளது.

இதுகுறித்து எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது என்று கூறிய ஜனாதிபதி ராஜபக்ஷ, தொழிற்சங்கத் தலைவர்களிடம் இந்தத் திட்டம் குறித்த அனைத்து முன்மொழிவுகளையும் யோசனைகளையும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *