இந்தியாவில் தயாரிக்கப்படும் கொவி ஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கான ஒழுங்குமுறை அனுமதி அடுத்தவாரம் வழங்கப்படும் என சிறிலங்காவின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைமை அதிகாரி மருத்துவர் கமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிஷீல்ட் தடுப்பூசி நேற்று தொடக்கம் அயல் நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
பூட்டான், மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கான விநியோகம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போதும், சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், மொரீஷியஸ் ஆகிய நாடுகள் இன்னும் ஒழுங்குமுறை அனுமதியை வழங்காததால், இந்த நாடுகளுக்கு தடுப்பூசியை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, வரும் பெப்ரவரி 4ஆம் நாள், சிறிலங்காவின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம், கொரோனா தடுப்பூசி வழக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.