சனாதிபதி செயலணியில் பங்கேற்பது அரசியல் தீர்வுக்கு குந்தகத்தை ஏற்படுத்தாது என்று இரா சம்பந்தன் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு பதிலளித்துள்ளார்

492

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான சனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதானது அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் எவ்விதமான குந்தகத்தினையும் ஏற்படுத்தாது என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான சனாதிபதி செயலணிக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அந்தக்கூட்டத்தில் பங்கேற்க கூடாதென முக்கிய சில காரணங்களை சுட்டிக்காட்டி வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு கடிதம் மூலம் கோரியிருந்தார்.

எனினும் குறித்த அநத கூட்டத்தில் பங்கேற்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

இவ்வாறான நிலையில் சனாதிபதி செயலணியில் சிறிலங்கா படையினருடன் இணைந்து செயற்படுவதானது, அரசியல் தீர்வு உட்பட பல விடயங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று வடமாகாண முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த விடயங்கள் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனாதிபதி செயலணியில் குறைகள் காணப்படுவதாக கூறுவதால் பயனில்லை எனவும், அந்தச் செயலணியில் நேரடியாக பங்கேற்று குறைகளை சுட்டிக்காட்டி அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் என்றே தாம் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தச் செயலணியில் பங்கேற்பதையும் அரசியல் தீர்வுக்கு உதவக்கூடிய வகையில் சாதகமாக மாற்றியமைப்பதற்கு முயற்சிப்போம் என்ற நம்பிக்கையை கொண்டிருப்பதாகவும் இரா சம்பந்தன் தனது அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *