கொரோனா நோயால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதா? இல்லையா? என்பதை, சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவே தீர்மானிக்கும் என்று, விடயத்துக்குப் பொறுப்பானவரான, ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே நாடாளுமன்றில் தெரிவித்தார்.
கொரோனா நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று சபையில் அறிவித்திருந்தார்.
விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் இது தொடர்பான விளக்கத்தை வழங்குமாறு, நாடளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளேயிடம் இன்று கோரினார்.
அதற்கு பதில் வழங்கிய அவர், இந்த விடயத்தில் தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவிடமே இருப்பதாகவும், பிரதமர் நேற்று தெரிவித்த யோசனை, குறித்த நிபுணர்கள் குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இதன்போது எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவுஃப் ஹக்கீம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைவிட இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் எவருக்கு உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன், இந்த விடயத்தை அனுமதிப்பதற்கு குறித்த நிபுணர்கள் குழுவே தடையாக இருப்பதாகவும், இந்த விடயம் தற்போது ஜெனீவா வரையில் சென்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், அவ்வாறு ஜெனீவா வரையில் இந்த விடயம் செல்லக்கூடாது என்பதோடு, இதனை விரைவாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவுஃப் ஹக்கீம் தெரிவித்தார்.