முக்கிய செய்திகள்

சவுதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலையில் தொடர்புடைய சவுதி அரேபியாவை சேர்ந்த 16 பேருக்கு அமெரிக்காவில் நுழைய தடை

351

சவுதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலையில் தொடர்புடைய சவுதி அரேபியாவை சேர்ந்த 16 பேருக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டார்.

அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸ் மூலமாக தூதரகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஜமால் கஷோகி எழுதி வந்ததால் அவரை கொல்ல, பட்டத்து இளவரசரே உத்தரவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா அரசு மறுத்தது. தங்கள் நாட்டுக்கும் ஜமால் கஷோகியின் கொலைக்கும் தொடர்பில்லை என கூறி வந்தது. பின்னர் தங்கள் நாட்டை சேர்ந்த சில ஏஜெண்டுகள் தனிப்பட்ட முறையில் ஜமாலை கொலை செய்ததாக சவுதி அரேபியா அறிவித்தது.

இது தொடர்பாக 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக சவுதி அரேபியா தெரிவித்தது. ஆனால் அந்த வழக்கு குறித்த விவரங்கள் வெளிப்படையாக இல்லை.

சவுதி பட்டத்து இளவரசருக்கும் ஜமால் கஷோகியின் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக துருக்கி அரசு உறுதியாக நம்புகிறது. அமெரிக்காவின் செனட் சபையும் இந்த கொலைக்கு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தான் பொறுப்பு என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஆனால் இந்த விவகாரத்தில் பட்டத்து இளவரசருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க அதிபர் டிரம்ப் மறுத்து வருகிறார்.

மாறாக சவுதி அரேபியாவை அமெரிக்காவின் முக்கிய ஆயுத இறக்குமதியாளர் என்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நம்பிக்கையான கூட்டணி நாடு என்றும் பறைசாற்றி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் ஜமால் கஷோகியின் படுகொலையில் தொடர்புடைய 16 பேருகு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவு துறை அறிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் முன்பு 20க்கும் மேற்பட்ட சவுதி அதிகாரிகளின் விசா ரத்து செய்யப்பட்டு 17 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *