முக்கிய செய்திகள்

சிங்கள பௌத்தர்களுக்கு உரித்தான உரிமைகள் சிறுபான்மையினருக்கும் கிடைக்க வேண்டும்

858

இலங்கையில் சிங்கள பௌத்தர்களுக்கு உரித்தான அனைத்து உரிமைகளும் நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி பூஜாப்பிட்டிய – ஹம்பத்தென்ன பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சி அடிப்படைவாத கட்சியல்ல எனவும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்கும் வரை நாட்டில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சகல இனங்களுக்கும் சமவுரிமை கிடைக்க வேண்டும் என்பதே தமது கட்சியின் நோக்கம் எனவும் தெரிவித்துளள் அவர், அரசாங்கம் கவிழ்ந்து விடும் என்று சிலர் எதிர்பார்த்துள்ள போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான கட்சிகள் இணைந்து அமைத்துள்ள பலமான அரசாங்கம் எந்த வகையிலும் கவிழாது எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எனினும் கடந்த காலங்களில் இதே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் போதே யாழ் நூலக எரிப்பு, 83 யூலை இனக்கலவரம் என பல்வேறு இன அழிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் இருந்தே அரசாங்கத்தின் பயணத்தை தடுத்து நிறுத்த மகிந்த தலைமையிலான எதிர்க்கட்சி முயற்சித்ததாக தெரிவித்துள்ள அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றத்திலும் அவர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாகவும், இறுதியில் வரவு செலவுத்திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சனாதிபதியும் பிரதமரும் வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி நாட்டுக்கு பெருமளவிலான முதலீடுகளை கொண்டு வர தலையிட்டு செயற்பட்டு வருவதாகவும், இதனடிப்படையில் அம்பாந்தோட்டையில் இருந்து மொனராகலை வரை 500 தொழிற்சாலைகளை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் நிர்வாக சீர்கேடு காரணமாக அரசின் வருமானத்தை கூற வெட்கமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்தின் ஆண்டு வருமானத்தில் கடன் தவணை மற்றும் வட்டியை செலுத்த முடியாமல் உள்ளதாகவும், இந்த கடனுடன் தம்மால் முன்னோக்கி செல்ல முடியாது என்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இப்படியான நிலையிலேயே சீன அரசாங்கம் இலங்கையில் 1.5 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளதாகவும், சீனா இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் என்றும், இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு குறைந்த வரியை அறவிடுவது தொடர்பாக இந்தியாவுடன் உடன்படிக்கை கையெழுத்திடப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை அதிகளவான வருமானத்தை ஈட்ட முடியும் எனவும், சீனா செய்ய உள்ள இந்த முதலீட்டின் ஊடாக ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற போதிலும், இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருவதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *