முக்கிய செய்திகள்

சிரியாவிடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றிய கோலன் குன்றுகள் பகுதி மீதான இஸ்ரேலின் உரிமையை அமெரிக்க அரசு அங்கீகரித்துள்ளது.

322

சிரியாவிடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றிய கோலன் குன்றுகள் பகுதி மீதான இஸ்ரேலின் உரிமையை அமெரிக்க அரசு அங்கீகரித்துள்ளது. இஸ்ரேலில் பொது தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அமெரிக்க அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 1967ம் ஆண்டு நடந்த இஸ்ரேல் ராணுவம் நடத்திய 6 நாள் போரில் சிரியாவின் கோலன் குன்றுகள், பாலஸ்தீன எல்லையில் உள்ள மேற்கு கரை, கிழக்கு ஜெருசேலம் மற்றும் காசா பகுதிகள் கைப்பற்றப்பட்டன.

இதில் கோலன் குன்றுகள் மற்றும் கிழக்கு ஜெருசேலம் ஆகியவற்றை இஸ்ரேலுக்கு சொந்தமான பகுதியாக உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. தற்போது கோலன் குன்றுகள்  பகுதியில் 20,000 இஸ்ரேலியர்கள் வசிக்கிறார்கள்.

இந்நிலையில் 52 ஆண்டுகளுக்கு பின் கோலன் குன்றுகள் பகுதி இஸ்ரேலுக்கு சொந்தமான இடம் என்று அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.

இது குறித்து அதிபர் டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில்  ‘‘இஸ்ரேலின் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கோலன் குன்றுகள் பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே 52 ஆண்டுகளுக்கு பின் கோலன் குன்றுகள் மீதான இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா முழுமையாக அங்கீகரிக்கிறது’’ என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹு நன்றி தெரிவித்துள்ளார்.

சிரியாவை பயன்படுத்தி இஸ்ரேலை அழிக்க ஈரான் திட்டமிட்டு வரும் நேரத்தில் அதிபர் டிரம்பின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று பெஞ்சமின் நேதான்யாஹு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஊழல் புகாரில் சிக்கி தவித்து வரும் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ தற்போது பொது தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.

அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்புக்கு அவரது கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த அமெரிக்கா தன் தூதரகத்தையும் ஜெருசலேமிற்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *