சிரியா நாட்டின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஆயுத கிடங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுவர்கள் உள்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இட்லிப் மாகாணத்தில் துருக்கி நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள சர்மாடா நகரில் உள்ள அரசு ஆயுத கிடங்கில் இன்று இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயுதக்கிடங்கின் அருகாமையில் உள்ள இரண்டு வீடுகள் அதிர்ச்சியில் இடிந்து தரைமட்டமானதாகவும், இடிபாடுகளில் சிக்கிய மக்களை கனரக வாகனங்களின் உதவியுடன் இராணுவத்தினர் மீட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும், 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களுள் 12 பேர் சிறுவர்கள் எனவும் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் சுமார் 50 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அங்குள்ள போர் நிலவரங்களை பார்வையிடும் மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இது விபத்தா அல்லது வன்முறை தாக்குதலா என்பது தொடர்பான முதல்கட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை.