முக்கிய செய்திகள்

சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதனை பிரித்தானியா நிராகரித்துள்ளது

594

சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதனை பிரித்தானியா மறுத்துள்ளது.

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்றும், சிரியாவில் வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ள அமெரிக்க துருப்புகளை நாட்டுக்கு மீண்டும் அழைக்க இதுவே சரியான நேரம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ள நிலையிலேயே இவ்வாறு படைகள் மீட்டுக்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவது போல் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்படவில்லை என்று கூட்டுப்படையில் இடம்பெற்றுள்ள நாடுகளில் ஒன்றான பிரித்தானியா தெரிவித்துள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கையை கூட்டுப்படை தொடங்கியதில் இருந்து ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகளை கூட்டுப்படை கைப்பற்றி உள்ள போதிலும், தொடர்ந்தும் ஐ.எஸ் அமைப்பினரின் அச்சுறுத்தல் இருப்பதாக அது கூறியுள்ளது.

சிரியாவில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமானது அமெரிக்கா கூறுவதுபோல் உலகளாவிய கூட்டுப்படைக்கோ அல்லது அதன் நடவடிக்கைகளுக்கோ முற்றுப்புள்ளி வைப்பதற்கான அடையாளம் அல்ல என்றும் தெரிவித்துள்ள பிரித்தானிய அரசு செய்தித் தொடர்பாளர், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு கூட்டுப்படை உறுப்பினர்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அவ்வாறே கருத்துத் தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகாரத் தேர்வுக்குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் டாம் துகண்ட்ஹாட், அதிபர் டிரம்பின் நடவடிக்கை தங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *