சிரியா அரசு படைகள் ரசாயன ஆயுத தாக்குதலுக்கு தயாராகி கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

327

இட்லிப் மாகாணத்தின் மீது ரசாயன தாக்குதல்கள் நடத்த சிரியா அரசு படைகள் தயாராகிக் கொண்டிருப்பதற்கான “நிறைய ஆதாரங்கள்” இருப்பதாக அந்நாட்டிற்கான புதிய அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி பெரிய நகரமான இட்லிப் மீது நடக்கக்கூடிய தாக்குதல் கொடுமையானதாக இருக்கும் என்று ஜிம் ஜெஃபரி கூறியதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருவதற்கான நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன என்றும், சிரியா அரசாங்கம் அல்லது அதன் கூட்டாளிகளால் நடத்தப்படும் எந்த ஒரு ரசாயன தாக்குதல்களுக்கும் அமெரிக்கா தக்க பதிலளிக்கும் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.

ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிரியா போரினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு, மிகப்பெரிய ராஜதந்திர நடவடிக்கை தேவை என்று ஜெஃபரி தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் குழுவை வீழ்த்தும் வரை, சிரியாவுடன் தொடர்பில் இருக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய அர்ப்பணிப்புடன் செயல்படுவார் என்று கூறிய ஜிம், போரில் சிரியா அதிகாரிகளுக்கு ஆதரவளிக்க இரானிய போராளிகள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளராக இருக்க சிரியா அதிபர் அசாத்துக்கு எதிர்காலம் இல்லை என்றும், ஆனால் அவரை வெளியேற்றுவது அமெரிக்காவின் வேலையல்ல என்றும், எனினும் அரசியல் மாற்றத்திற்காக ரஷ்யாவுடன் அமெரிக்கா சேர்ந்து பணியாற்றும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *