முக்கிய செய்திகள்

சிறிலங்காவின் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான அழைப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாது;மாவை

83

தமிழர் மீதான ஆக்கிரமிப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்,  சிறிலங்காவின் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான அழைப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

“வடக்கு – கிழக்கு தமிழர் பூமியில் சிங்கள பேரினவாத அரசாங்கம் தொல்பொருள் பிரதேசங்கள் என்ற பெயரில் முன்னெடுக்கும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.

ஒருபுறம் இராணுவ நில ஆக்கிரமிப்புகள் மும்முரமாக இடம்பெற்று வருகிறது, மறுபுறம் மரபுரிமைகள், தமிழர் அடையாளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு சிங்கள மயமாக்கல் இடம்பெற்று வருகிறது.

இந்த நாட்டில் தமிழர்களும் பூர்வீகக்குடிகள், எமக்கும் இந்த மண்ணில் சம உரிமை உண்டு என்பதை இந்த அரசாங்கம் நிராகரிக்கும் விதத்திலேயே செயற்பட்டு வருகின்றது.

அதன் வெளிப்பாடுகளே இன்று துரிதமாக முன்னெடுக்கப்படும் நில அபகரிப்பாகும்.

தமிழர்களின் சுதந்திரம், உரிமைகள் மறுக்கப்படுகின்ற நாட்டில், எம்மால் மகிழ்ச்சியாக சுதந்திர தினத்தை கொண்டாட முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் நாம் எவரும் கலந்து கொள்ள மாட்டோம்.

அன்றைய தினம் வடக்கில் இடம்பெறும் எமது உரிமைக்கான போராட்டத்தில் நாம் கலந்து கொண்டு எமது மக்களின் நியாயம், நில உரிமை, பேச்சு சுதந்திரத்திற்காக நாம் குரல் எழுப்பும் கடமை எமக்குண்டு” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *