சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து பிரித்தானியாவின் தொழிற்கட்சி தலைவர் கியர் ஸ்ராமர் (Gear Schramer) கவலை எழுப்பியுள்ளார்.
தைப்பொங்கலை முன்னிட்டு கீச்சகத்தில் பதிவிட்டுள்ள காணொளி வடிவிலான வாழ்த்துச் செய்தியிலேயே தொழிற்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவிலும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் தற்போதைய கொரோனா சூழலில் ஆற்றும் பங்களிப்புகளையும் மதிப்புடன் நினைவுபடுத்தியுள்ளார்.
மேலும், “சிறிலங்காவில் அமைதி மற்றும் நீதிக்கான தொடர்ச்சியான போராட்டத்தை பற்றி நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
அங்குள்ள தற்போதைய நிலைமை உங்களில் பலருக்கு மிகுந்த கவலை அளிக்கிறது என்பதை நான் அறிவேன்.
பொறுப்புக்கூறல் நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து சிறிலங்கா அரசு விலகியுள்ளது என்பதில் நானும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.
சர்வதேச பொறுப்புக்கூறலை பிரித்தானியா தொடர்ந்து வழிநடத்த வேண்டும், அத்துடன், வலுவான குரலாக இருக்க வேண்டும்.
தொழிற்கட்சி நீதியையும் மனித உரிமைகளையும் கோருவதற்காக, தமிழ் சமூகத்துடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.