முக்கிய செய்திகள்

சிறிலங்காவின் 25 மாவட்டங்களுக்கும், இராணுவ அதிகாரிகள் நியமனம்.

358

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு, சிறிலங்காவின் 25 மாவட்டங்களுக்கும், இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையை நாடு முழுவதும், ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியம் கருதி, சிறிலங்கா இராணுவத் தளபதியின் பரிந்துரைக்கு அமைய, சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தினால், இராணுவ இணைப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவினால் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இந்த ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் செயலகங்கள்,மூலம், மாவட்ட மட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்கள், தனிமைப்படுத்தலுக்கான போக்குவரத்து, சிகிச்சை, மருந்துகள், கருவிகள், உலர் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், மற்றும் தேவையான ஏனைய அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும், சுமுகமாக மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்துக்கு, மேஜர் ஜெனரல்  சேனாரத் பண்டாரவும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு, மேஜர் ஜெனரல்  K N S கொட்டுவேகொடவும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு மேஜர் ஜெனரல் R M P J ரத்நாயக்கவும்,  வவுனியா மாவட்டத்துக்கு, மேஜர் ஜெனரல்  W L P W பெரேராவும், மன்னார் மாவட்டத்துக்கு, மேஜர் ஜெனரல் A A I J பண்டாரவும் இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேஜர் ஜெனரல் C D வீரசூரிய திருகோணமலை மாவட்டத்துக்கும், மேஜர் ஜெனரல் l T D வீரகோன் அம்பாறை மாவட்டத்துக்கும், மேஜர் ஜெனரல்  C D  ரணசிங்க மட்டக்களப்பு மாவட்டத்துக்குமான இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய மாவட்டங்களுக்கும் இதுபோன்று இராணுவ அதிகாரிகள் இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *