முக்கிய செய்திகள்

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் ஆதரவு திரட்டும் புலம்பெயர் அமைப்புகள்

984

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் சிறிலங்காவிற்கு எதிராக ஆதரவுகளைத் திரட்டும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிறிலங்கா பொறுப்புக்கூற வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படும் நிலையில், சிறிலங்கா இதற்கு மேலும் கால அவகாசம் கோரும் போது அதற்கு மனித உரிமைகள் பேரவை ஆதரவு வழங்குவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் சில புலம்பெயர் அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரானது இம்மாதத்தின் இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமைகளுக்கான தமிழ் மையம் உட்பட பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் ஜெனீவாவிலுள்ள இராஜதந்திரிகளுடன் பேச்சுக்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக மனித உரிமைகளுக்கான தமிழ் மையத்தின் பொதுச் செயலர் எஸ்.வி.கிருபாகரன் தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடரில் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுவார். இவர் தனது உரையில் அண்மையில் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக உரையாற்றுவார் எனக் கூறப்படுகிறது.

பெப்ரவரி 28 செவ்வாயன்று, மங்கள சமரவீர ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளார். அத்துடன் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சில வெளியுறவு அமைச்சர்களுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இதுமட்டுமல்லாது சிறிலங்கா தனக்குச் சார்பான பிறிதொரு தீர்மானம் ஒன்றை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதற்கான ஆதரவையும் திரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான பொறிமுறைகளை அமுல்படுத்துவதற்கான கால அவகாசம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு தேவை என்பதை ஆதரிக்கும் முகமாகவே இத்தீர்மானம் இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

34வது கூட்டத் தொடர் இடம்பெறும் காலப்பகுதியில் அதாவது மார்ச் 22 அன்று சிறிலங்கா தொடர்பான விவாதம் இடம்பெறும்.

இவ்விவாதமானது கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசேனால் சிறிலங்காவின் மனித உரிமை நிலைப்பாடு தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இடம்பெறும்.

சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் மற்றும் சித்திரவதை மற்றும் ஏனைய சித்திரவதை தொடர்பான சிறப்பு அறிக்கையாளராலும் சிறிலங்கா தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளரான யுவன் ஈ.மெண்டெஸ் சிறிலங்கா தொடர்பான தனது அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் ‘சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சித்திரவதைகளை விடத் தற்போது இடம்பெறும் சித்திரவதைகளின் அளவானது குறைவாகக் காணப்பட்டாலும் அத்துடன் சித்திரவதை முறைமைகள் மாறினாலும் ‘சித்திரவதைக் கலாச்சாரம்’ என்பது தற்போதும் தொடர்கிறது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சிறிலங்கா பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மற்றும் குற்றவியல் திணைக்களமானது விசாரணைகளின் போது சந்தேகநபர்களுக்கு எதிராக உடல் மற்றும் உள ரீதியான சித்திரவதைகளை மேற்கொள்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கப்படுவதாகக் காரணம் காட்டி கைதுசெய்யப்படும் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்படும் போதும் விசாரணையின் போதும் உடல் மற்றும் உள ரீதியான சித்திரவதைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளனர்.

advertisement

ஆனால் இவர்களைக் கைதுசெய்யும் சிறிலங்கா அரச திணைக்களங்கள் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றது எனத் தொடர்புபடுத்துகின்றனர்’ என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு அறிக்கையாளரான மெண்டெஸ் கடந்த ஆண்டு சிறிலங்காவிற்குப் பயணம் செய்திருந்தார். தனது பயணத்தின் போது சந்தேகநபர்கள் குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவோர் எவ்வித குற்றங்களும் உறுதிப்படுத்தப்படாது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவதுடன் சில வார அல்லது நாட்களாக இவர்கள் விசாரணை செய்யப்படும் போது இவர்கள் நீதிமன்றுக்குக் கொண்டு செல்லப்படுவதில்லை என்பதற்கான சான்றுகளை மெண்டெஸ் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு தடுத்து வைக்கப்படும் காலத்தில் சித்திரவதைகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறுகின்றன. நல்லிணக்க பொறிமுறைகள் மீதான ஆலோசனைச் செயலணியும் சிறிலங்கா மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விவாதத்தின் போது அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

சிறிலங்காவில் நல்லிணக்கச் செயற்பாடு அமுல்படுத்தப்படும் போது வெளிநாட்டு நீதிபதிகள் உட்பட அனைத்துலகப் பிரசன்னத்துடன் கூடிய பொறிமுறை பின்பற்றப்பட வேண்டும் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படுவதை விரும்பவில்லை.

இந்த அறிக்கையானது அதிபர் சிறிசேனவிடம் கையளிக்கப்பட்ட போதிலும் நிலைமாறு நீதிப் பொறிமுறையில் அரசியல் யாப்பு சீர்திருத்தம் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிபர் சிறிசேன தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

‘இந்த அறிக்கை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன் சிறிலங்காவில் நிலைமாறு கால நீதியை மதிப்பதற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது’ என நல்லிணக்க பொறிமுறைகள் மீதான ஆலோசனைச் செயலணி தெரிவித்துள்ளது.

சிறிலங்கா மீதான அழுத்தத்தைத் தொடர்ந்தும் பேணுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்துவதற்காக வடமாகாண சபை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் ஜெனீவாவிற்குப் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்துலக நீதிப் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் வடமாகாண சபையானது சொந்தமாக சுயாதீன போர்க்குற்றவியல் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுவதற்கு சட்ட ரீதியான சாதகத்தன்மையைக் கண்டறியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியிடப்பட்டது.

தனது முன்மொழிவு மற்றும் அறிக்கையின் சட்ட நுணுக்கத்தை ஆராயுமாறு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் சட்டவாளருமான சின்னத்துரை தவராஜாவிடம் முதலமைச்சர் கேட்டிருந்தார்.

வட்டக்கண்டல் பாடசாலைப் படுகொலை போன்ற வழக்குகள் தொடர்வதில் ஆர்வம் காட்டப்படவில்லை எனவும் இவ்வாறான நிலையில் பாரபட்சமற்ற பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்படும் என்பதில் சிறிதளவும் நம்பிக்கை காணப்படவில்லை என தவராஜா தெரிவித்தார்.

பொறுப்புக்கூறல் தொடர்பாக கடந்த ஆண்டில் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தை சிறிலங்கா தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக மனித உரிமைகளுக்கான தமிழ் மையத்தின் பொதுச் செயலர் கிருபாகரன் தெரிவித்தார்.

‘அமெரிக்காவில் புதிதாகப் பதவியேற்றுள்ள அதிபர் மற்றும் புதிய ஐ.நா செயலாளர் நாயகம் ஆகியோரின் உதவிகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் அதிபர் சிறிசேன ஈடுபட்டு வருகிறார்.

அதாவது செப்ரெம்பர் 2015ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்காவும் இணைஅனுசரணை வழங்கிய போதிலும் இதனை இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை.

ஆகவே இது தொடர்பான அழுத்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காகவே சிறிலங்கா தற்போது அனைத்துலக சமூகத்தின் உதவியை நாடிவருகிறது.

அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிப்பொறிமுறையை சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டும் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஆனாலும் நாளுக்கு நாள் சிறிலங்காவின் நிலைப்பாடு மாறிவருகிறது. வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள் தொடர்ந்தும் அழிக்கப்படுகின்றனர்’ என கிருபாகரன் குறிப்பிட்டார்.

சிறிலங்காவின் அரசாங்கங்கள் மக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் வெற்று வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. ‘இதுவரை சிறிலங்காவானது இனப்பிரச்சினைக்கு எந்தவொரு சாதகமான அணுகுமுறையையும் கைக்கொள்ளவில்லை.

மறுபுறத்தே, ஐ.நாவின் பரிந்துரைகள் குறிப்பாக, ஐ.நா செயலாளர் நாயகம், மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர், ஆணை வழங்குனர்கள் மற்றும் ஒப்பந்தங்களை மேற்கொள்பவர்களின் பரிந்துரைகளை சிறிலங்காவில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் புறக்கணித்தே வருகின்றன’ என கிருபாகரன் மேலும் குறிப்பிட்டார்.

சிறிலங்காவின் மனித உரிமை நிலைப்பாடுகள் தொடர்பாக அனைத்துலக சமூகம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பதுடன் இதன் முயற்சிகள் மேலும் விரைவுபடுத்தப்பட வேண்டியதும் இன்றியமையாத
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *